புவிசார் குறியீடுக்கு காத்திருக்கும் காகித பொம்மை உற்பத்தியாளர்கள்
புவிசார் குறியீடுக்கு காத்திருக்கும் காகித பொம்மை உற்பத்தியாளர்கள்
UPDATED : ஜன 10, 2024 12:00 AM
ADDED : ஜன 10, 2024 09:50 AM
காஞ்சிபுரம்:
தமிழகத்தில் மதுரை மல்லி, தஞ்சை வீணை, கோவில்பட்டி கடலைமிட்டாய் உள்ளிட்ட, 50க்கும் மேற்பட்ட பொருட்களுக்கு மத்திய அரசு புவிசார் குறியீடு வழங்கியுள்ளது.இந்த புவிசார் குறியீடு என்பது இடத்தை மையப்படுத்தி உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு மத்திய அரசு வழங்கும் அங்கீகாரமாகும்.நடவடிக்கைஇந்த குறியீடு பெறுவதன் மூலம், இந்திய அளவிலும், சர்வதேச அளவிலும் உற்பத்தி பொருட்கள் கவனம் பெறும். நம்பகத்தன்மையை அதிகரிப்பதோடு உற்பத்தியை அதிகரிக்க உதவும். அவ்வாறு முக்கியத்துவம் வாய்ந்த இந்த புவிசார் குறியீடு பெறுவதற்கு, தமிழகத்தில் பல்வேறு பொருட்கள் காத்திருக்கின்றன.தமிழக சட்டசபையில், கடந்தாண்டு மார்ச் மாதம், கைவினைப் பொருட்கள் தொடர்பான மானிய கோரிக்கை அறிவிப்பின்போது, காஞ்சிபுரம் காகித பொம்மை உட்பட 10 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுக்கப்படும் என, கைவினைப் பொருட்கள் துறை அமைச்சர் அன்பரசன் தெரிவித்திருந்தார்.இதுவரை புவிசார் குறியீடு கிடைக்காததால், காஞ்சிபுரம் காகித பொம்மை தயாரிக்கும் தொழிலாளர்கள், புவிசார் குறியீடு எப்போது கிடைக்கும் என காத்திருக்கின்றனர்.நம்பிக்கை
காஞ்சிபுரம் நகரில், வரதராஜ பெருமாள் கோவில் அருகேயுள்ள அஸ்தகிரி தெரு, பொம்மைக்கார தெரு, ஆனைகட்டித் தெரு என, சின்ன காஞ்சிபுரம் பகுதியின் பல தெருக்களில், காகித பொம்மை தயாரிக்கும் பணியை, தலைமுறைகளாக ஆயிக்கணக்கான தொழிலாளர்கள் செய்து வருகின்றனர்.காஞ்சிபுரம் பட்டு சேலைக்கு ஏற்கனவே புவிசார் குறியீடு பெற்றிருக்கும் நிலையில், காகித பொம்மைகளுக்கும் புவிசார் குறியீடு கிடைத்தால், உற்பத்தி அதிகரிப்பதோடு, தொழிலாளர்களின் குடும்ப பொருளாதாரமும் உயரும் என பொம்மை தயாரிக்கும் தொழிலாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.இதுகுறித்து, காகித பொம்மை தயாரிக்கும் தொழிலாளர்கள் கூறியதாவது:
காஞ்சிபுரத்தில் கைகளால் நெய்யப்படும் பட்டு சேலை புகழ் பெற்றது போல, காகிதத்தால் செய்யப்படும் பொம்மைகளும் புகழ் பெற்றது. சின்ன காஞ்சிபுரம் பகுதியில், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இத்தொழிலை நம்பியுள்ளனர்.ஆண்டுதோறும், நவராத்திரி, கிருஷ்ண ஜெயந்தி போன்ற முக்கிய விசேஷ நாட்கள் வரும் முன்பாக, பொம்மைகள் அதிகளவில் விற்பனை செய்யப்படுகின்றன. எங்களிடம் முகவர்கள் நேரடியாக வந்து கொள்முதல் செய்து கொள்கின்றனர். ஒரு பொம்மை தயாரிக்க ஒரு வாரத்திற்கு மேலாகிறது.மழைக்காலங்களில் இந்த பொம்மைகள் தயாரிக்க முடியாது. கோடை காலத்தில் அதிகளவில் உற்பத்தி செய்வோம். பொம்மைகளின் அளவுக்கு ஏற்ப, 100 - 400 ரூபாய் வரை பொம்மை விலைகள் மாறுபடும்.அங்கீகாரம்
புவிசார் குறியீடு காகித பொம்மைகளுக்கு கிடைத்தால், எங்களுக்கு அங்கீகாரம் கிடைக்கும். வெளி மாநிலங்களில் எங்கள் பொம்மைகள் அதிக அளவில் விற்பனை செய்ய வாய்ப்பு ஏற்படும்.இதனால், உற்பத்தி அதிகமாவதோடு, வாழ்வாதாரம் கிடைக்கும். பொம்மை செய்ய தேவைப்படும் மூலப்பொருட்களான, களிமண், அச்சு, பெயின்ட், மாவு போன்ற பொருட்கள் அதிகமாகிவிட்டதால், விற்பனையை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இதற்கு, புவிசார் குறியீடு உதவும் என நம்புகிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.