UPDATED : ஜன 10, 2024 12:00 AM
ADDED : ஜன 10, 2024 10:32 AM
புதுடில்லி:
முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான 2024 - 25ம் ஆண்டுக்கான நீட் தேர்வு ஜூலை 7ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.மருத்துவ படிப்புகளில் சேருவோருக்காக, நீட் எனப்படும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. இது, இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளுக்கு நடத்தப்படுகிறது. இளநிலை மருத்துவ படிப்புகள் மற்றும் முதுநிலை மருத்துவ படிப்புகளில் சேர, தனித்தனியாக தகுதித்தேர்வை தேசிய தேர்வு முகமை ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது.பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிந்த பின்இளநிலை நீட் தேர்வு நடத்தப்படும். இதேபோல், மருத்துவ அறிவியலுக்கான தேசிய தேர்வுகள் வாரியம் சார்பில் நடத்தப்படும் முதுநிலை நீட் தேர்வின் வாயிலாக எம்.டி., எம்.எஸ்., மற்றும் முதுகலை டிப்ளமோ மருத்துவப் படிப்புகளில் மாணவர் சேர்க்கை நடக்கின்றன.அந்த வகையில் மார்ச் 3ம் தேதி முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, இந்த நீட் தேர்வு, ஜூலை 7ம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, இந்த ஆண்டில் இத்தேர்வில் தகுதி பெறுவோருக்கான கட் - ஆப் தேதி, வரும் ஆக., 15ம் தேதி என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.முன்னதாக, 2024 - 25ம் கல்வியாண்டில் முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வுக்கு மாற்றாக, நெக்ஸ்ட் எனப்படும் தேசிய தகுதித் தேர்வு நடத்தப்படும் என தகவல் வெளியானது.இதற்கேற்ப, தேசிய மருத்துவ கமிஷன் சட்டத்தில் சமீபத்தில் திருத்தம் செய்யப்பட்டது. எனினும், இந்த சட்டம் நடைமுறைப்படுத்தப்படும் வரை முதுநிலை நீட் தேர்வு தொடரும் எனவும் அறிவிக்கப்பட்டது.