UPDATED : ஜன 12, 2024 12:00 AM
ADDED : ஜன 12, 2024 12:49 PM
ஓமலுார்:
பெரியார் பல்கலையில் கவர்னர் ஆலோசனை நடத்திய நிலையில், மாணவர் இயக்க கூட்டமைப்பினர், கறுப்புக்கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.சென்னையில் இருந்து கோவை செல்வதற்கு, தமிழக கவர்னர் ரவி, விமானம் மூலம் நேற்று சேலம் வந்தார். காரில் புறப்பட்ட கவர்னர், பெரியார் பல்கலைக்கு சென்றார். துணைவேந்தர் ஜெகநாதன் வரவேற்றார்.அவரது அறைக்கு சென்ற கவர்னர், 30 நிமிடம் பேசினார். பின், பல்கலை சிண்டிகேட் கூட்ட அரங்கில், அனைத்து துறை தலைவர்களை அழைத்து, 20 நிமிடம் ஆலோசித்தார். அதன் பின் விருந்தினர் மாளிகையில், மதிய உணவருந்தி விட்டு, காரில் கோவைக்கு புறப்பட்டார்.இதனிடையே, துணைவேந்தருக்கு ஆதரவாக கவர்னர் செயல்படுவதாக கூறி, பல்கலை முன், தி.மு.க., காங்., வி.சி., கம்யூ., கட்சிகளின் மாணவர் இயக்க கூட்டமைப்பினர், ஒரு மணி நேரம் கறுப்பு கொடி காட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். கருப்பூர் போலீசார் அவர்களை கைது செய்து மாலையில் விடுவித்தனர்.