2500 ஆண்டு கற்கால நினைவுச் சின்னங்கள் வருஷநாடு அருகே கண்டுபிடிப்பு
2500 ஆண்டு கற்கால நினைவுச் சின்னங்கள் வருஷநாடு அருகே கண்டுபிடிப்பு
UPDATED : ஜன 14, 2024 12:00 AM
ADDED : ஜன 14, 2024 11:16 AM
கடமலைக்குண்டு:
வருஷநாடு தங்கம்மாள்புரம் அருகே வாய்க்கால்பாறையில் 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட பெருங்கற்கால நினைவுச் சின்னங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.அப்பகுதியைச் சேர்ந்த வேல்முருகன் கொடுத்த தகவலில் கடமலைக்குண்டு அரசு மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் செல்வம், வரலாற்று ஆசிரியர் மணிகண்டன், மாணவர்கள் பிரகாஷ், சிவனேஸ்வரன் ஆய்வு செய்தனர். 40 ஏக்கரில் பெருங்கற்கால மக்களின் நினைவுச் சின்னங்கள் கண்டுபிடித்தனர். இது குறித்து தொல்லியல் ஆய்வாளர் செல்வம் கூறியதாவது:
இறந்தவர்களின் நினைவாக நினைவுச் சின்னங்கள் பல்வேறு நாடுகளில் பல்வேறு வடிவங்களில் அமைக்கப்பட்டுள்ளன. கால ஓட்டத்திற்கு ஏற்ப சில மாறுதல்கள் ஏற்படுகின்றன. கன்னியாகுமரி முதல் தருமபுரி மாவட்டம் வரை இப்பண்பாடு பரவி உள்ளது. பெருங்கற்கால மக்கள், இறந்த தங்களது முன்னோர்களுக்கு பெரியகல் பலகைகள்,கற்களைக் கொண்டும் தாழிகள், ஈம தொட்டிகளை சதுரம், செவ்வகமாகவும் கல்லறைகளை கட்டி அவற்றின் உள்ளே இறந்தவர் உடலை அல்லது எலும்புகளை வைத்து அடக்கம் செய்து இறந்த பின்னும் அவர்கள் வாழ்வதாக கருதி வந்தனர். அவற்றை வழிபாடு செய்யும் பழக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளனர். பெரிய கற்களை கொண்டு நினைவுச் சின்னங்கள் எழுப்பியதால் இக்காலத்தை பெருங்கற்காலம் என வகைப்படுத்தினர்.