UPDATED : ஜன 14, 2024 12:00 AM
ADDED : ஜன 14, 2024 11:21 AM
மதுரை:
இறந்த மகளின் விருப்பத்தை பூர்த்தி செய்ய மதுரை கொடிக்குளம் அரசு பள்ளிக்கு ரூ.7 கோடி மதிப்புள்ள 1 ஏக்கர் 52 சென்ட் நிலத்தை தாய் தானமாக வழங்கினார்.மதுரை சர்வேயர் காலனியை சேர்ந்தவர் ஆயி (எ) பூரணம் 52. கனரா வங்கி தல்லாகுளம் கிளை எழுத்தர். ஒத்தக்கடை அருகே யா.கொடிக்குளத்தை சேர்ந்தவர். கனரா வங்கியில் பணியாற்றிய கணவர் 1991ல் இறந்தார்.அதே வங்கியில் பூரணத்திற்கு கருணைப் பணி நியமனம் வழங்கப்பட்டது. இவர்களது மகள் ஜனனி 32. பி.காம்., பட்டதாரி. 2 ஆண்டுகளுக்கு முன் இறந்தார். மாணவர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு உதவ வேண்டும், என அடிக்கடி தாயிடம் கூறிவந்தார்.மகளின் ஆசையை நிறைவேற்றும் வகையில் கொடிக்குளம் அரசு நடுநிலைப் பள்ளிக்கு 1 ஏக்கர் 52 சென்ட் நிலத்தை தானமாக பூரணம் வழங்கியுள்ளார்.நமது நிருபரிடம் அவர் கூறியதாவது:
கணவர் இறந்தபோது ஜனனிக்கு ஒன்றரை வயது. வாழ்க்கையில் மிக சிரமப்பட்டேன். ஏழைகள், பின்தங்கிய மாணவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்பது சிறுவயது முதல் ஜனனியின் நோக்கமாக இருந்தது.எனது தந்தை கண்ணான் சின்னான் அம்பலத்திற்கும் அதே நோக்கம் இருந்தது. அவர் பல ஏழை குழந்தைகளுக்கு உதவினார். பயனடைந்த மாணவர்கள் தற்போது பெரிய பொறுப்புகளில் உள்ளனர்.கொடிக்குளம் பள்ளியில் தான் நானும் படித்தேன். எனது தந்தை சீதனமாக வழங்கிய நிலம் அது. எனது கிராமத்தைச் சேர்ந்த குழந்தைகள் படித்து வாழ்க்கையில் உயர வேண்டும். பள்ளியை உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்த வேண்டும் என்ற நோக்கில்பள்ளிக் கல்வித்துறை பெயரில் பத்திரம் பதிந்து முதன்மைக் கல்வி அலுவலர் கார்த்திகாவிடம் ஒப்படைத்தேன்.பணம், பொருள் அழிந்துவிடும். கல்விச் செல்வம் நிலையானது. எனது இம்முயற்சிக்கு உறவினர்கள் யாரும் தடைபோடவில்லை. ஜனனியின் கனவை நிறைவேற்றுவோம் என்பதில் அவர்கள் உறுதுணையாக இருந்தனர். இதை பிறந்த ஊருக்கு நாங்கள் ஆற்றும் கடமையாக பார்க்கிறோம்.உயர்நிலைப் பள்ளியாகதரம் உயரும்போது அதிக மாணவர்கள் படிப்பர். அவர்களுக்குள் ஜனனியைநான் பார்ப்பேன். ஆடிட்டர் ஆக வேண்டும்என்பது ஜனனியின் நோக்கம். அது நிறைவேறவில்லை என்றார்.