மாமல்லையில் கிராமிய கலைகளுடன் சர்வதேச பயணியர் பொங்கல் கொண்டாட்டம்
மாமல்லையில் கிராமிய கலைகளுடன் சர்வதேச பயணியர் பொங்கல் கொண்டாட்டம்
UPDATED : ஜன 15, 2024 12:00 AM
ADDED : ஜன 15, 2024 10:01 AM
மாமல்லபுரம்:
மாமல்லபுரம் அருகில், கிராமிய கலைகளுடன் சர்வதேச பயணியர், பொங்கல் பண்டிகையை கொண்டாடினர்.மாமல்லபுரத்தில் உள்ள பல்லவர் கால சிற்பங்களை, சர்வதேச பயணியர் கண்டு ரசித்து வருகின்றனர். நம் நாட்டின், பாரம்பரிய, கிராமிய நடனக் கலைகளை, அவர்கள் ரசிக்க விரும்புவதால், தமிழக சுற்றுலாத்துறை, ஆண்டுதோறும், இங்கு நாட்டிய விழா நடத்துகிறது.இந்நிலையில், நேற்று, மாமல்லபுரம் அடுத்த, வடகடம்பாடியில், விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது, அங்குள்ள திரவுபதி அம்மன் கோவில் அருகில், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், பாரம்பரிய உடை வேட்டி, சட்டை அணிந்து, சர்வதேச பயணியருக்கு மலர்மாலை, அங்கவஸ்திரம் அணிவித்து, தமிழர் கலாசார முறையில் வரவேற்றார்.கலைஞர்கள், கரகம் உள்ளிட்ட கிராமிய நடனமாடி, பயணியரும் உற்சாகமடைந்து, கரகத்துடன் நடனமாடி மகிழ்ந்தனர். கோவில் முன், பானைகளில் பச்சரிசி, நெய், வெல்லம், ஏலக்காய் இட்டு, தண்ணீர் நிரப்பி பொங்கியபோது, சர்வதேச பயணியர், பொங்கலை கிளறினர்.சூரிய கடவுளுக்கு படைத்து வழிபட்டு, இப்பண்டிகையின் கலாசாரம் அறிந்து போற்றினர். பொங்கல், சுண்டல் சுவைத்தனர். பரதம், சிலம்பம், மண்பானை தயாரிப்பு என ரசித்து, ஏர் உழுதனர். உறியடியில் பங்கேற்று பரிசு பெற்றனர்.மாட்டுவண்டி, டிராக்டரில் குதுாகல உலா சென்றனர். மாவட்ட வருவாய் அலுவலர் சுபா நந்தினி, சப் - கலெக்டர் நாராயணசாமி, சுற்றுலா அலுவலர் சக்திவேல், ஊராட்சி தலைவர் பரசுராமன் உட்பட பலர் பங்கேற்றனர்.இதுகுறித்து, சர்வதேச பயணியர் கூறுகையில், தமிழக உழவர்களின், அறுவடை பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்தை கண்டு வியந்தோம். கிராமிய கலைகள் மகிழ்ச்சியளித்தன. சொந்த நாட்டிற்கு திரும்பினாலும், நாங்கள் உற்சாகமாக அனுபவித்ததை, மறக்கவே மாட்டோம் என்றனர்.