UPDATED : ஜன 15, 2024 12:00 AM
ADDED : ஜன 15, 2024 05:09 PM
சிதம்பரம்:
சிதம்பரத்தில் ரூ. 48 லட்சம் செலவில் கட்டப்பட்ட புதிய நுாலகத்தை, சேர்மன் செந்தில்குமார் திறந்து வைத்து, சாவியை ஒப்படைத்தார்.சிதம்பரத்தில் கடந்த 68 ஆண்டுகளுக்கு மேலாக, தனியார் கட்டடத்தில் அரசு நுாலகம் செயல்பட்டு வந்தது. குறுகிய இடத்தில் இயங்கியதால் வாசகர்கள் கடும் சிரமம் அடைந்தனர். எனவே, நவீன வசதிகளுடன் புதிய நுாலக கட்டடம் கட்டித்தர பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.இந்நிலையில், 2014 ல் சிதம்பரம் நகராட்சி அலுவலகம் எதிரில் நுாலகம் கட்ட, நகராட்சி சார்பில் இடம் ஒதுக்கப்பட்டது. அதையடுத்து, தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற பின், சிதம்பரம் நகரமன்ற தலைவரான, செந்தில்குமார் நுாலகம் கட்ட நடவடிக்கை எடுத்தார்.நமக்கு நாமே திட்டத்தின் மூலம், 32 லட்சம் நிதி பெறப்பட்டது. அத்துடன் பொதுமக்கள் நிதியுதவி 16 லட்சம் என, மொத்தம் 48 லட்சம் ரூபாய் செலவில் புதிய நுாலக கட்டடம் கட்டி முடிக்கப்பட்டது.அதையடுத்து, புதிய கட்டடம் திறப்பு விழா நேற்று நடந்தது. நகராட்சி சேர்மன் புதிய கட்டடத்தை திறந்து வைத்து, கட்டட சாவியை நுாலகரிடம் ஒப்படைத்தார். நிகழ்ச்சியில் நகராட்சி துணைத் தலைவர் முத்து, நகராட்சி கமிஷனர் பிரபாகரன், பொறியாளர் மகராஜன், கவுன்சிலர்கள் ராஜன், மணிகண்டன், கல்பனா, லதா மற்றும் பலர் பங்கேற்றனர்.