UPDATED : ஜன 16, 2024 12:00 AM
ADDED : ஜன 16, 2024 10:56 AM
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் திருவள்ளுவரால் இயற்றப்பட்ட திருக்குறள், உலகப்பொதுமறை என, அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. தமிழை நேசிக்கும் தலைவர்கள், நாட்டின் எந்தவொரு இடத்துக்கு சென்றாலும், தங்களின் குரலை உயர்த்தி, குறள் சொல்கின்றனர்.திருக்குறளில் உள்ள, 1,300 குறள்கள், அவை இடம் பெற்றுள்ள அதிகாரம், எண்கள், அவை கூறும் கருத்து என, திருக்குறள் புத்தகத்தை ஆய்ந்து, அறிந்து, வித்தகராக வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்.உதாரணமாக, உலகு என முடியும் திருக்குறளை உங்களால் சொல்ல முடியும் என்றால், மடை திறந்த வெள்ளம் போல் சொல்கிறார். பறவை, எண்களை குறிக்கும் குறள் மட்டும் சொல்லுங்களேன்... என்றால், அதையும் சொல்கிறார். உதடுகள் ஒட்டும், ஒட்டாத குறள்கள், உடல் உறுப்புகள், எண்கள் சம்மந்தப்பட்ட குறள் என, திருக்குறள் சார்ந்த, எந்த வகையான கேள்விக்கும், நொடிப் பொழுதில் விளக்கம் சொல்கிறார். கிட்டத்தட்ட, 600 குறள்களை ஆங்கிலத்தில் கற்று வைத்திருக்கிறார்.ஆழ்ந்த உறக்கத்தில் அவரை தட்டி எழுப்பி, எந்த திருக்குறளை கேட்டாலும், அதை சட்டென் சொல்லும் ஆற்றல் படைத்திருக்கிறார். ஆண்டாண்டு காலமாய் திருக்குறளை பேசி வருகிறோம். இக்கால கல்வி முறை என்பது, வருமானம் ஈட்டுவதை மையப்படுத்தியே அமைந்துள்ள நிலையில் திருக்குறள் படிப்பதால், வேலை வாய்ப்பு கிடைக்குமா; பொருளாதாரம் உயருமா? குறள் படிப்பதால் என்ன பயன்..? என அடுத்தடுத்த கேள்விகளை கேட்டோம்.அலட்டிக் கொள்ளாமல் இப்படி பதில் சொன்னார்...சமுதாயத்தில் அடிமட்ட நிலையில், கண்டு கொள்ளப்படாமல் இருந்த என்னை உயர்த்தியது திருக்குறள். யாரிடம் எப்படி என்ன பேச வேண்டும், எங்கு எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது போன்ற வாழ்வியலை கற்றுக் கொடுத்தது. குறள், என்னை நல்ல மனிதனாக மாற்றியது.மொத்த குறளில், என்னை மிகவும் ஈர்த்தது, அருமை உடைத்தென்று... என துவங்கும், 611வது குறள் தான். எந்தவொரு செயலையும் செய்து முடிக்க முடியாது என, சோர்வுறாமல், அதை செய்து முடிக்க முயற்சி செய்ய வேண்டும் என்பது தான் அதன் அர்த்தம்.என் வாழ்நாள் முழுவதும் திருக்குறளை போதித்துக் கொண்டே இருக்க வேண்டும்; அதன் கருத்துக்களை உணர்த்திக் கொண்டே இருக்க வேண்டும். பள்ளி மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக திருக்குறள் கற்றுக் கொடுத்து, அனைவரிடத்திலும் குறள் சென்று சேர்ப்பதற்கான முயற்சியை மேற்கொள்ள இருக்கிறேன். இவ்வாறு, அவர் பேசினார்.எப்படி வந்தது ஆர்வம்!
அவிநாசி அருகே அம்மாபாளையத்தில் வசிக்கும் ரங்கராஜன், ஊராட்சி பள்ளியில் படிக்கும் தன் மகனுக்கு திருக்குறள் கற்றுத்தரும் போது, அதன் மீது ஈர்ப்பு வந்திருக்கிறது. தனது, 41வது வயதில் திருக்குறளை படிக்க துவங்கியவர், 5 மாதத்தில், 1,330 குறளையும், பொருளறிந்து கரைத்து குடித்து விட்டார். தற்போது, 62 வயதான நிலையில், குறிப்பிட்ட வார்த்தைகளில் முடியும் குறள்கள், மலர், எண்களை கொண்ட குறள், என தனித்தனியாக அதை பகுத்தாய்வு செய்வதில், ஆர்வம் காட்டி வருகிறார். அதோடு மட்டுமின்றி, குறள் கூறும் ஒழுக்க நெறியுடன் வாழ்ந்து வருகிறார்.