UPDATED : ஜன 16, 2024 12:00 AM
ADDED : ஜன 16, 2024 11:55 AM
புதுடில்லி:
நிலத்தை உழும் விவசாயிகள் முதல் எல்லைகளில் போராடும் வீரர்கள் வரை அனைவரது வாழ்க்கையிலும் இந்திய வானிலை ஆய்வு மையம் முக்கிய பங்காற்றி வருகிறது என துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் தெரிவித்துள்ளார்.தலைநகர் புதுடில்லியில் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் 150வது ஆண்டு தின கொண்டாட்டம் நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற துணை ஜனாதிபதியும் ராஜ்யபா தலைவருமான ஜக்தீப் தன்கர் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் அனைத்து சேவைகளையும் ஒருங்கிணைக்கும் &'மவுசம்&' என்ற மொபைல் செயலியை துவங்கி வைத்தார்.இந்த விழாவில் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் பேசியதாவது:
முந்தைய காலத்தில் விஞ்ஞான முன்னேற்றம் இல்லாததால் வானிலை ஆய்வு மையம் வழங்கிய முன்னறிவிப்புகள் தவறானவை என நிரூபிக்கப்பட்டன. ஆனால் தற்போது நிலைமை அப்படியில்லை. ஒவ்வொரு வினாடிக்கும் துல்லியமான முன்னறிவிப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன.வானிலை முன்னறிவிப்புகளை தாண்டி தேசிய நலன்களை பாதுகாக்கும் மற்றும் இயற்கையின் சீற்றத்தில் இருந்து குடிமக்களை பாதுகாக்கும் ஒரு பாதுகாப்பு அரணாக இந்திய வானிலை ஆய்வு மையம் உருவெடுத்துஉள்ளது.விவசாயம் முதல் சுகாதாரம் விமானம் முதல் எரிசக்தி நிலத்தை உழும் விவசாயி முதல் நாட்டின் எல்லையில் போராடும் ராணுவ வீரர் வரை அனைவரது வாழ்க்கையிலும் இந்திய வானிலை ஆய்வு மையம் முக்கிய பங்காற்றி வருகிறது.இந்திய வானிலை ஆய்வு மையம் வழங்கி வரும் துல்லியமான தகவல்களால் ஆழ்கடலில் ஓர் உயிரிழப்பு கூட ஏற்படவில்லை. மேலும் எந்த கப்பல்களும் சேதமடையவில்லை. நம் விஞ்ஞானிகளின் திறமைகளை பார்த்து நாடே பெருமைப்படுகிறது. இவ்வாறு அவர் பேசினார்.இந்த விழாவில் பா.ஜ.வைச் சேர்ந்த மத்தியபுவி அறிவியல் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு இந்திய வானிலை ஆய்வு மைய இயக்குனர் மிருத்யுஞ்சய் மொஹபத்ரா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.