UPDATED : ஜன 16, 2024 12:00 AM
ADDED : ஜன 16, 2024 05:17 PM
பெ.நா.பாளையம்:
பெரியநாயக்கன்பாளையம் அருகே மத்தம்பாளையம், அக்சரம் பப்ளிக் பள்ளியில் ஆண்டு விழா நடந்தது. முன்னாள் டி.ஜி.பி., சைலேந்திரபாபு, பெற்றோர், குழந்தைகளை எவ்வாறு வழி நடத்த வேண்டும் என்பது குறித்து பேசினார்.* பெற்றோர், தங்களை பாராட்ட வேண்டும் என்று குழந்தைகள் நினைக்கிறார்கள். குழந்தைகளை கடினமான சொற்களால் திட்டக்கூடாது.குழந்தைகளுக்கு ஆதரவு, பாராட்டு தேவைப்படுகிறது. அதை பெற்றோர் வழங்க வேண்டும். அவர்கள் மீது நிபந்தனையற்ற அன்பு செலுத்த வேண்டும்.* வீட்டில், அன்பு கிடைக்கும் குழந்தைகள், பள்ளிகளில் பாடங்களை கற்க செல்கிறார்கள். வீட்டில் அன்பு கிடைக்காத குழந்தைகள், அதை பள்ளிகளில் தேடி செல்கிறார்கள்.* குழந்தைகள் கேட்கும் கேள்விகளுக்கு, பெற்றோர் சளைக்காமல் பதில் சொல்ல வேண்டும். இன்று குழந்தைகளுக்கு நாம் கொடுக்கும் மிகப்பெரிய சொத்து கல்வி என்பதை அனைவரும் உணர வேண்டும்.* வீட்டில், குழந்தைகள் படிக்கும் சூழ்நிலையை ஏற்படுத்தி தர வேண்டியது பெற்றோர் கடமை. வீடு அமைதியாக இருக்க வேண்டும். கணவன், மனைவி எப்போதும் பேசிக் கொண்டிருக்காமல், அமைதி காக்க வேண்டும்.* வீட்டில் எப்போதும் மொபைல் போனில் பேசிக் கொண்டே இருக்காதீர்கள். சத்தமாக பாட்டு வைப்பது, எப்போதும் டிவி பார்ப்பது கூடாது.* குழந்தைகளுக்கு பெற்றோர் கதைகளை சொல்ல வேண்டும். விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்புகளின் கதை, மனிதன் சந்திர மண்டலத்தில் இறங்கிய கதை, நோய்களுக்கு விஞ்ஞானிகள் மருந்து கண்டுபிடித்த கதை ஆகியவற்றை எடுத்து கூற வேண்டும்.* குழந்தைகளை எப்போதும், பிற குழந்தைகளுடன் ஒப்பிடாதீர்கள். அளவோடு உண்ண பழக்க வேண்டும். உடல் பருமன், உடலை மட்டுமில்லாமல், மனதையும் பாதிக்கும். இதனால் அவர்களது முன்னேற்றம் தடைபடும்.* குழந்தைகள், தினமும் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். உலக அறிவை அவர்கள் பெற்றுக் கொள்வது அவசியம்.இவ்வாறு, பெற்றோருக்கு அறிவுரை வழங்கினார்.அக்சரம் பப்ளிக் பள்ளி தாளாளர் சிவகுமார், செயலாளர் ரமேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.