தமிழ் மொழியை பாதுகாத்தவர் பாரதி: கல்லூரி கருத்தரங்கில் பேச்சு
தமிழ் மொழியை பாதுகாத்தவர் பாரதி: கல்லூரி கருத்தரங்கில் பேச்சு
UPDATED : ஜன 16, 2024 12:00 AM
ADDED : ஜன 16, 2024 05:16 PM
பாலக்காடு:
தமிழ் மொழியை அழியாமல் பாதுகாத்தும், அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லவும் பாலமாக இருந்தவர் பாரதி என கல்லுாரி கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.கேரள மாநிலம், பாலக்காடு அரசு விக்டோரியா கல்லுாரி தமிழ் துறை திருவள்ளுவர் அரங்கில் பாரதியார் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, தமிழ் துறை மற்றும் கேரள மாநில மொழி சிறுபான்மை தமிழாசிரியர் சங்கம் இணைந்து தேசிய கருத்தரங்கு நடத்தியது.இதில், வீழ்வேன் என்று நினைத்தாயோ என்ற கருத்தரங்குக்கு, கல்லுாரி தமிழ் துறை தலைவர் முனைவர் ரவி தலைமை வகித்தார். கல்லுாரி முதல்வர் முனைவர் பாபுராஜ் துவக்கி வைத்தார்.பாரதியின் பல்வேறு தலைப்பில் கட்டுரைகள் குறித்து, ஆசிரியர்கள் சுரஜா, டயானா, முனைவர் பட்ட ஆய்வாளர் அனசுயா, எழுத்தாளர் குருஜி குருவாயூரப்பன் ஆகியோர் பேசினர்.தமிழ் கலை மன்றம் மாவட்ட தலைவர் கணேசன், கேரளா மொழி சிறுபான்மை மாநில தலைவர் முத்துச்செல்வம், மாவட்டச் செயலாளர் முரளீதரன், ஆசிரியர் முத்துக்குமார் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசினர்.அவிநாசி அரசு அறிவியல் மற்றும் கலை கல்லுாரி தமிழ்த்துறை தலைவர் முனைவர் மணிவண்ணன் பேசியதாவது:
கவிஞர் பாரதி தமிழின் முக்கிய அடையாளமாவார். ஒரு மொழி அழியும் போது, ஒரு இனம் அழியும். அதனால், மொழியை காப்பாற்றுவதற்காக முக்கியமான பணியைச் செய்தவர் பாரதி.குழந்தைகள் மற்றும் பெண்களுக்காக மிகவும் அக்கறை எடுத்துக் கொண்டவர். எல்லோரும் தாய்நாடு என்று கூறும்போது தந்தையர் தேசம் என்று சொல்லி, அன்பை தாண்டி வீரம் என்கிற உணர்வை உருவாக்கியவர் பாரதி.ஒரு தேசத்துக்கு விடுதலை வேண்டும் என்றால், ஜாதி, மதம் மற்றும் பெண் அடிமைத்தனம் ஒழிய வேண்டும் என்று சொல்லியவர் பாரதி. உலக நாடுகள் தங்களுடைய வன்மத்தை தமிழின் மீது காட்டுகின்றன. அதில் ஒன்று தான் யாழ்ப்பாணம் நுாலகம் எரித்த சம்பவமாகும்.தமிழ் மொழியை அழியாமல் பாதுகாத்தும், அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வதும் மிக முக்கியம். இதற்கு பாலமாக இருந்தவர் பாரதி.இவ்வாறு, அவர் பேசினார்.அவருக்கு, மனிதநேயன் விருதை கல்லுாரி முதல்வர் முனைவர் பாபுராஜ் வழங்கி கவுரவித்தார். தமிழ் கலை மன்றம் மாவட்ட தலைவர் கணேசன், கேரளா மொழி சிறுபான்மை மாநில தலைவர் முத்துச்செல்வம், மாவட்டச் செயலாளர் முரளீதரன், ஆசிரியர் முத்துக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.