UPDATED : ஜன 18, 2024 12:00 AM
ADDED : ஜன 18, 2024 09:23 AM
மதுரை:
மதுரை மடீட்சியா சார்பில் தமுக்கம் மைதானத்தில் நாளை (ஜன.,19) முதல் ஜன.,21 வரை மேட் இன் மதுரை கண்காட்சி தினமும் காலை 10:30 முதல் இரவு 9:00 மணி வரை நடக்கிறது. அனுமதி இலவசம்.மடீட்சியா தலைவர் லட்சுமி நாராயணன், கண்காட்சி தலைவர் குணமாலை கூறியதாவது:
கோயில் நகரம் என்பதைத் தாண்டி தொழில் நகரம் என்று சொல்லும் வகையில் மதுரையில் நிறைய குறு, சிறு தொழில்கள் உள்ளன. மதுரை மக்களுக்கு இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் புதிய தொழில்முனைவோர்களை ஊக்குவிக்கவும் மேட் இன் மதுரை கண்காட்சியை நடத்துகிறோம்.125 ஸ்டால்களில் முதல் 39 ஸ்டால்களில் வாங்குவோர் விற்போர் சந்திப்பு போன்று தொழில் நிறுவனங்களின் தயாரிப்பு இடம் பெறும். மத்திய குறு, சிறு, நடுத்தரத் தொழில் வளர்ச்சி நிறுவனம், மாவட்ட தொழில் மையம், தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாட்டு மையம், இந்திய சிறுதொழில் வளர்ச்சி வங்கி இணைந்து கண்காட்சியை நடத்துகின்றன. மதுரை டி.வி.எஸ். ஈரோகிரிப், டி.வி.எஸ்., ரப்பர், ஹைடெக் அராய், தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கி ஆதரவு தருகின்றன.ஜன.,19 மாலை 4:00 மணிக்கு மடீட்சியா வளாகத்தில் மதுரையில் தொழில் முதலீடுகளை ஈர்ப்பது எப்படி என்ற கருத்தரங்கும், ஜன.,20 மாலை 4:00 மணிக்கு மதுரையில் குறு, சிறுதொழில்கள் பெரு நிறுவனங்களாக வளர்ச்சி பெறாததற்கான காரணம் குறித்தும் கலந்துரையாடல் நடக்கிறது என்றனர். நிர்வாகிகள் கோடீஸ்வரன், சந்திரசேகரன், அசோக், சம்பத் உடனிருந்தனர்.