வீட்டு வேலைக்கு மாணவர்கள்; தலைமை ஆசிரியை மீது புகார்
வீட்டு வேலைக்கு மாணவர்கள்; தலைமை ஆசிரியை மீது புகார்
UPDATED : ஜன 18, 2024 12:00 AM
ADDED : ஜன 18, 2024 09:40 AM
கலபுரகி:
பள்ளி மாணவர்களை, தன் வீட்டு வேலைக்கு பயன்படுத்திய தலைமை ஆசிரியை மீது, போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.கலபுரகி நகரின், மாலகத்தி கிராமத்தின் சாலையில் மவுலானா ஆசாத் ஆங்கில நடுநிலைப் பள்ளி உள்ளது. இது கர்நாடக சிறுபான்மையினர் நலத்துறைக்கு உட்பட்டது. இதில் ஜோஹ்ரா ஜபீன் தலைமை ஆசிரியையாக பணியாற்றுகிறார்.இவர் சில மாதங்களாக, பள்ளியின் கழிப்பறைகளை சுத்தம் செய்ய, மாணவர்களை பயன்படுத்துகிறார். அது மட்டுமின்றி, சில மாணவர்களை தன் வீட்டுக்கு அழைத்துச் சென்று, தோட்டத்தை சுத்தம் செய்ய, தண்ணீர் பாய்ச்ச, வீட்டின் கழிப்பறையை சுத்தம் செய்ய வைத்துள்ளார். இதை செய்ய மறுக்கும் மாணவர்களை அடித்து துன்புறுத்தியுள்ளார்.இதுகுறித்து, மாணவர்கள் தங்கள் பெற்றோரிடம் கூறினர். கொதிப்படைந்த அவர்கள், பள்ளிக்குச் சென்று தலைமை ஆசிரியை ஜோஹ்ரா ஜபீனை கண்டித்து எச்சரித்தனர். ஆனால், இதை பொருட்படுத்தாத அவர், ஜனவரி 13ல் மாணவர் ஒருவரை, தோட்டத்தை சுத்தம் செய்ய அழைத்துச் சென்றார்.மதியம் 2:00 மணிக்கு மேலாகியும், பள்ளியில் இருந்து வீடு திரும்பவில்லை. பெற்றோர் பள்ளிக்குச் சென்று விசாரித்தபோது, மாணவரை தலைமை ஆசிரியை தன் வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளதாக, ஆசிரியர் கூறினார். அதன்பின் தலைமை ஆசிரியை இடம் மொபைல் போனில் தொடர்பு கொண்டபோது, அதில் பேசிய அவரது கணவர் மிரட்டினார்.எனவே, போலீஸ் உதவி எண் 112ல் தொடர்பு கொண்டு, தகவல் தெரிவித்து அவர்களின் உதவியுடன் மகனை திரும்பப் பெற்றனர். மாணவர்களை வீட்டு வேலையை செய்வது மட்டுமின்றி, செய்ய மறுத்தால் நிர்வாணமாக்கி தாக்குவதாக மிரட்டியுள்ளார். ஹால் டிக்கெட் வழங்க, பாட புத்தகங்கள் கொடுக்க மாணவர்களிடம் தலா 100 ரூபாய் வசூலிப்பதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இது குறித்து, கலபுரகியின் ரோஜா போலீஸ் நிலையத்தில் பலரும் புகார் அளித்துள்ளனர். இதன்படி போலீசார் விசாரணையை துவக்கிஉள்ளனர்.இதுகுறித்து, தலைமை ஆசிரியை ஜோஹ்ரா ஜபீன் கூறியதாவது:
என் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு பொய்யானது. நான் கண்டிப்பான ஆசிரியை. மாணவர்களுக்கு ஒழுங்குடன் பாடம் நடத்துகிறேன். சில மாணவர்கள் பாடங்களில் இருந்து தப்பிக்க, என் மீது பொய்யான புகார் அளித்துள்ளனர்.கடந்தாண்டு எஸ்.எஸ்.எல்.சி., தேர்வில் 93 சதவீதம் மாணவர்கள் தேர்ச்சி பெற்றனர். இதனால் மவுலானா ஆசாத் ஆங்கில பள்ளியின் சுற்றுப்புறத்தின், சில பள்ளிகள் என் பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சிக்கின்றன. இந்த பள்ளிகள், மாணவர்களின் பெற்றோரை, புகார் அளிக்கும்படி துாண்டியிருக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.