UPDATED : ஜன 18, 2024 12:00 AM
ADDED : ஜன 18, 2024 09:41 AM
தங்கவயல்:
தங்கவயலில் தமிழுக்கு அழிவே இல்லை என தமிழ்ச் சங்கத் தலைவர் கலையரசன் தெரிவித்தார்.தங்கவயல் தமிழ்ச் சங்கத்தில் 42ம் ஆண்டு பொங்கல், தமிழர் திருநாள் திருவள்ளுவர் தின விழா செயல் தலைவர் கமல் முனிசாமி தலைமையில், புரவலர்கள் ஆனந்த கிருஷ்ணன், பேராசிரியர் கிருஷ்ண குமார், ஆர்.வி.குமார் முன்னிலையில் நடந்தது.கவிஞர் கல்யாண் குமார் தமிழ்த்தாய் வாழ்த்து பாடினார். திருவள்ளுவர் சிலைக்கு தருமன் முனிசாமி மாலை அணிவித்தார். வக்கீல் ஜோதிபாசு தமிழ்க்கொடியை ஏற்றினார். தங்கவயல் அரசியல் கட்சிகளின் தலைவர்கள் அன்பு, ராஜேந்திரன், சுடர், சாரங்கபாணி, சேகர் ஆகியோர் முன்னிலையில், மணிப்பூர் மாணவர்கள் குத்துவிளக்கு ஏற்றி வைத்தனர்.நிறைவாக, தமிழ்ச் சங்கத் தலைவர் கலையரசன் பேசியதாவது:நமது தமிழுக்கு தங்கவயலில் அழிவே இல்லை என்பதை வெளிப்படுத்தும் வகையில், இந்த விழா ஒரு அத்தாட்சியாக அமைந்துள்ளது. வீட்டில் தமிழறிந்த பெற்றோர் அனைவருமே தம் பிள்ளைகளுக்கு தமிழை எழுதப் படிக்கக் கற்றுத் தாருங்கள். தமிழை வாழ வையுங்கள்.இங்கே தமிழரெல்லாம் தமிழர் திருநாளுக்காக கூடினோம், கலைந்தோம் என்று இல்லாமல், தமிழர் நலம் காக்க, தமிழர் உரிமைக்காக ஒருமித்த கருத்தோடு குரல் கொடுக்கவும் தயாராக இருக்க வேண்டும்.கர்நாடக சட்டசபையில், தமிழர் இடம் பெறும் வகையில் வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும். ஆதிதிராவிடர் என்ற பிரிவை ஆதித்தமிழர் என்று மாற்ற சட்டசபையில் சட்டத்திருத்தம் செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.விழா ஏற்பாடுகளை கமல் முனிசாமி, திருமுருகன், அப்பு ஜெயகுமார், நீலம் பிரபு, அனீஷ், சூர்யா ஆகியோர் செய்திருந்தனர்.