பள்ளி முழு வளர்ச்சி திட்டத்தை செயல்படுத்துங்க! கல்வித்துறைக்கு வலியுறுத்தல்
பள்ளி முழு வளர்ச்சி திட்டத்தை செயல்படுத்துங்க! கல்வித்துறைக்கு வலியுறுத்தல்
UPDATED : ஜன 18, 2024 12:00 AM
ADDED : ஜன 18, 2024 10:00 AM
உடுமலை:
அரசுப்பள்ளியின் சுற்றுச்சூழலை முழுவதும், இயற்கை சூழலாக மாற்றும் பள்ளி முழு வளர்ச்சி திட்டத்தை செயல்படுத்த, கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென கல்வியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.கல்வியில் மட்டுமின்றி, கட்டமைப்பு வசதிகள் மற்றும் சுற்றுப்புற சூழலிலும், அரசு பள்ளிகளின் தரத்தை உயர்த்தும் வகையில், பல திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.இதன் அடிப்படையில், மாணவர்களுக்கு பிடித்தமான கல்விச்சூழலை ஏற்படுத்தும் பள்ளிச் சூழலை அமைப்பதற்கும், பள்ளி முழு வளர்ச்சித்திட்டம் செயல்படுத்துவதற்கும் அரசு அறிவித்தது. இத்திட்டத்தில், பள்ளியின் கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகளை தவிர, பள்ளிச்சூழலை மாணவர்களை ஈர்க்கும் வகையில் அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுப்பதற்கு, பள்ளி நிர்வாகத்திடம் கருத்துகள் கேட்கப்பட்டது.பள்ளி நிர்வாகத்தினரும், ஆவலுடன் தங்களின் பள்ளிகளுக்கு தேவையான வசதிகள் மற்றும் மாணவர்களுக்கான புதிய திட்டங்கள் குறித்து, கருத்துரு அனுப்பினர்.இதில், பள்ளியின் சூழலில், ஆங்கிலம் மற்றும் தமிழ் எழுத்துகளை சுவர்களில் அச்சிடுவது, கழிப்பறை சுற்றுச்சுவர்களில் துாய்மை, சுத்தம், சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு வகையிலான வண்ண ஓவியங்களை வரைவது, பள்ளியிலுள்ள மரங்களை சுற்றி, இருக்கைகள் அமைத்து, மரங்களின் பயன்களை வடிவமைப்பது,இயற்கை சூழலில் பாடம் நடத்துவதற்கான ஏற்பாடு, துாய்மை, கல்வியின் முக்கியத்துவம் குறித்த வாசகங்களை வகுப்பறை சுவர்களில் அமைப்பது போன்ற ஏற்பாடுகளை இத்திட்டத்தின் வாயிலாக, செயல்படுத்த தயாராக இருந்தனர்.நிதி ஒதுக்கீடு இல்லாததால், மாணவர்களுக்கு பயனுள்ள இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. அரசுப்பள்ளிகளை மேம்படுத்துவதற்கான இத்திட்டம், போதிய விழிப்புணர்வு இல்லாமல் செயல்படுத்துவதில் தாமதம் ஏற்படுவதாக, பள்ளி ஆசிரியர்கள் தெரிவித்தனர்.மாதிரி பள்ளிகளாக சில பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவற்றுக்கு தேவையான வசதிகளுக்கு நிதிஒதுக்கீடு செய்யப்படுகிறது. இருப்பினும், இத்திட்டம் அனைத்து பள்ளிகளுக்குமானதாக இருப்பதாலும், பள்ளி சூழலை முழுமையாக மாணவர்களுக்கு ஏற்றதாக மாற்றுவதால், கல்வித்துறை இத்திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கல்வியாளர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.