பெரியார் பல்கலை முறைகேடு புகார்; ஐகோர்ட்டில் போலீஸ் புதிய தகவல்
பெரியார் பல்கலை முறைகேடு புகார்; ஐகோர்ட்டில் போலீஸ் புதிய தகவல்
UPDATED : ஜன 19, 2024 12:00 AM
ADDED : ஜன 20, 2024 08:42 AM
சென்னை:
பெரியார் பல்கலை துணைவேந்தருக்கு எதிரான வழக்கில் தனியார் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் மேற்கொண்டதில் பணப் பரிமாற்றம் நடந்ததா என்பது குறித்தும் விசாரிக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் காவல்துறை தெரிவித்துள்ளது.பெரியார் பல்கலை துணைவேந்தர் ஜெகநாதன்; விதிகளை மீறி பல்கலை பெயரில் நிறுவனத்தை துவங்கி அரசு நிதியை பயன்படுத்தியதாக பல்கலை ஊழியர் சங்கத்தினர் புகார் அளித்தனர்.ஜாதி பெயரை குறிப்பிட்டு திட்டியதாகவும் அவருக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டது. புகாரின்படி இந்திய தண்டனை சட்டம் மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டப் பிரிவுகளின் கீழ் கருப்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர்.சேலம் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட ஜெகநாதனுக்கு ஏழு நாட்கள் இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டது. தன் மீதான வழக்கை ரத்து செய்யக் கோரி ஜெகநாதன் தாக்கல் செய்த மனுநேற்று நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது.துணைவேந்தர் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஏ.நடராஜன் ஆஜராகி யூகத்தின் அடிப்படையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. நிலம் ஒதுக்கீடு பெயர் மாற்றம் தனியாருடன் ஒப்பந்தம் ஆகியவற்றுக்கு 2023ல் பல்கலை சிண்டிகேட்டில் அனுமதி கோரப்பட்டது. ஒரு ரூபாய் கூட பரிமாறவில்லை என்றார்.போலீஸ் சார்பில் அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் தாமோதரன் ஆஜராகி அரசு பல்கலை ஆட்சிமன்ற குழுவின் அனுமதியின்றி கடந்தாண்டு பல்கலை பெயர் மற்றும் முகவரியில் நிறுவனத்தை பதிவு செய்து 2024 ச.அடி நிலத்தையும் பயன்படுத்தி உள்ளனர்.நான்கு தனியார் நிறுவனங்களுடன் மேற்கொண்ட ஒப்பந்தங்களில் பணம் பரிமாற்றம் நடந்ததா என்பது குறித்து விசாரித்து வருகிறோம் என்றார்.முன்னதாக விசாரணை நடந்து வரும் நிலையில் நீதிமன்றம் எப்படி தலையிட முடியும்; பணப்பரிமாற்றம் நடந்ததா என விசாரிக்கப்பட வேண்டும்; வழக்கில் ஜெகநாதனுக்கு சம்மன் அனுப்பப்பட்டதா என கேள்விகளை எழுப்பிய நீதிபதி ஆவணங்களை ஆய்வு செய்வதாக கூறி இன்றைக்கு விசாரணையை தள்ளி வைத்தார்.