வேலை பார்க்கும் பெண்களுக்கு பல்கலை. கல்லுாரிகளில் விடுதி
வேலை பார்க்கும் பெண்களுக்கு பல்கலை. கல்லுாரிகளில் விடுதி
UPDATED : ஜன 19, 2024 12:00 AM
ADDED : ஜன 20, 2024 08:45 AM
சென்னை:
வேலைபார்க்கும் பெண்கள் தங்க வசதியாக, அனைத்து மாநிலங்களில் உள்ள பல்கலைகள் மற்றும் கல்லுாரி வளாகங்களில், விடுதி வசதி அமைக்க உள்ளதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது.அரசு பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளுக்கு, பல்கலை மானியக்குழுவான யு.ஜி.சி.,யின் செயலர் மணீஷ் ஜெயின் அனுப்பியுள்ள கடிதம்:
அறிவியல், தொழில்நுட்பம், இன்ஜினியரிங் மற்றும் கணிதம் சார்ந்த, ஸ்டெம் கல்வியை, மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இந்த முறையில் பட்டம் பெறுவோரில், 43 சதவீதம் பேர் பெண்களாக உள்ளனர். இதனால், அனைத்து துறைகளிலும் பணியாற்றும் பெண்களின் சதவீதம், 37 ஆக உயர்ந்துள்ளது.தன்னிறைவு பெற்ற இந்தியாவை உருவாக்கும் பிரதமரின் திட்டத்தில், பெண்கள் முக்கிய இடம் பிடிக்க உள்ளனர். எனவே, அவர்களுக்கு நாட்டின் முன்னேற்றத்திலும், திட்டங்களின் வளர்ச்சி பணிகளிலும் முக்கியத்துவம் தரப்பட வேண்டும்.கிராமங்களில் இருந்து பணி நிமித்தமாகவும், கல்விக்காகவும், நகர்ப்புறங்களுக்கு இடம் மாற வேண்டிய நிலை உள்ளது. இதற்கு பெண்களுக்கு பாதுகாப்பான, அடிப்படை வசதிகள் நிறைந்த, குறைந்த செலவிலான தங்கும் இடங்கள் தேவை. இதற்காக, சக்தி நிவாஸ் என்ற பெயரில், பணிபுரியும் பெண்களுக்கான விடுதி வசதி ஏற்படுத்தும் மத்திய அரசின் திட்டம், நடைமுறையில் உள்ளது.இதற்கு, பல்கலை மற்றும் கல்லுாரி வளாகங்களில், பொருத்தமான இடம் அல்லது கட்டடங்களை தேர்வு செய்யுமாறு, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது.இதன்படி, பல்கலைகள் இடம் அளிக்க முன் வந்தால், விடுதி நடத்தும் செலவுக்கு, பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் நிதியுதவி வழங்கும். எனவே, பல்கலைகள் மற்றும் கல்லுாரிகள் உரிய பதில் அளிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.