UPDATED : ஜன 26, 2024 12:00 AM
ADDED : ஜன 26, 2024 11:26 AM
கர்நாடகா:
கர்நாடகாவில் புணிபுரியும், மதுரையைச் சேர்ந்த தமிழ் பெண் ஐ.ஏ.எஸ்., அதிகாரி திவ்யா பிரபுவுக்கு, ஜனாதிபதி திரவுபதி முர்மு, நேற்று தேசிய விருது வழங்கினார்.தேர்தல் பணியில் சிறப்பாக பணியாற்றி வரும் அதிகாரிகளுக்கு தேசிய அளவில் விருதுகள் வழங்கப்படுவது வழக்கம். அந்த வகையில், 2023ம் ஆண்டுக்கான விருதுகளை, இம்மாதம் 17ம் தேதி, தேர்தல் ஆணையம் அறிவித்தது.இதில், சித்ரதுர்கா கலெக்டர் திவ்யா பிரபுவுக்கு, வாக்காளர் பட்டியல் நிர்வகிப்பில் தேசிய விருது அறிவிக்கப்பட்டது. இவர், தமிழகத்தின் மதுரையைச் சேர்ந்தவர். இது போன்று, கர்நாடக வணிக வரி கமிஷனர் ஷிகாவுக்கும் தேசிய விருது அறிவிக்கப்பட்டது.இவர்களுக்கு, டில்லியில் நேற்று நடந்த தேசிய வாக்காளர் தின விழாவில், ஜனாதிபதி திரவுபதி முர்மு, தேசிய விருது வழங்கி கவுரவித்தார். திவ்யா பிரபு கூறுகையில், கலெக்டராக என் பணியை தான் செய்தேன். இத்தகைய விருதுகள் வழங்குவதன் மூலம், பணியை செய்ய ஊக்கமளிக்கிறது என்றார். இவரது கணவர் ராம்பிரசாத் மனோகர், பெங்களூரு குடிநீர், வடிகால் வாரிய நிர்வாக இயக்குனராக பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கது.