மாணவர்கள் நாட்டின் எதிர்காலம் குடியரசு தினவிழாவில் எம்.பி., பேச்சு
மாணவர்கள் நாட்டின் எதிர்காலம் குடியரசு தினவிழாவில் எம்.பி., பேச்சு
UPDATED : ஜன 27, 2024 12:00 AM
ADDED : ஜன 27, 2024 11:03 AM
நாமக்கல்:
நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில், குடியரசுதின விழாவை முன்னிட்டு, எம்.பி., ராஜேஸ்குமார், வெளிமாநில மாணவ, மாணவியர்களுடன் கலந்துரையாடினார்.அப்போது, அவர் பேசியதாவது:
நாம் பல்வேறு வகையான காலசாரம், மொழி, உடை ஆகியவற்றை பின்பற்றினாலும், நாம் அனைவரும் இந்தியர்களாக ஒற்றுமையாக உள்ளோம். அரசியலமைப்பு நமது ஜனநாயகத்தின் முதுகெலும்பு என்பதால், அரசியலமைப்பு கொள்கைகளை நிலை நிறுத்துவது ஒவ்வொரு குடிமகனின் கடமை. இந்தியா முழுவதும் உள்ள மாணவர்கள், நமது கால்நடை மருத்துவக் கல்லுாரிக்கு வருகை புரிந்து பயில்வது மிகவும் பெருமையாகும். வெளிமாநிலங்களை சேர்ந்த மாணவ, மாணவியர் தங்களது அவசர காலங்களில் சொந்த ஊருக்கு செல்வதற்கு உறுதிபடுத்தப்பட்ட ரயில் பயணச் சீட்டு பெறுவதற்கான சிரமங்களை போக்கி, பயணச் சீட்டை உறுதி செய்ய எனது அலுவலகத்தின் மூலம் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள ஆவனம் செய்கிறேன்.எந்த நேரத்திலும், எந்த நாளிலும், எந்த உதவிக்கும் நீங்கள் என்னை தொடர்பு கொள்ளலாம். இதற்காக மாணவர்கள் அடங்கிய வாட்ஸ் ஆப் குழுவை உருவாக்கி, அக்குழுவின் மூலம் தங்களது கோரிக்கைகளை தெரிவிக்கலாம். கல்லுாரி மாணவர்களாகிய நீங்கள் தான் நம் நாட்டின் எதிர்காலம். சமுதாயத்தில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்த உங்கள் அறிவையும், திறமையையும் பயன்படுத்த வேண்டும்.கால்நடை மருத்துவக் கல்லுாரியில், மகளிர் விடுதி அமைப்பதற்கு எனது எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, 50 லட்சம் ரூபாய் நிதி அளிக்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.நாமக்கல் கால்நடை மருத்துவ கல்லுாரி மற்றும் ஆராய்ச்சி நிலைய முதல்வர் செல்வராஜ், மாணவர் சங்க துணைத்தலைவர் பாலசுப்ரமணியன், பேராசிரியர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.