தேர்தலில் ஓட்டளிக்கும் உரிமையை பயன்படுத்துங்க! கலெக்டர் வலியுறுத்தல்
தேர்தலில் ஓட்டளிக்கும் உரிமையை பயன்படுத்துங்க! கலெக்டர் வலியுறுத்தல்
UPDATED : ஜன 27, 2024 12:00 AM
ADDED : ஜன 27, 2024 11:04 AM
கோவை:
தேசிய வாக்காளர் தின விழிப்புணர்வு ஊர்வலத்தை, கோவை கலெக்டர் அலுவலகத்தில், கலெக்டர் கிராந்திகுமார் நேற்று துவக்கி வைத்தார். டி.ஆர்.ஓ., ஷர்மிளா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) செந்தில்வடிவு, தாசில்தார் வெங்கடாசலம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கலெக்டர் அலுவலகத்தில் துவங்கிய ஊர்வலம் எல்.ஐ.சி., அலுவலகம் வழியாக வ.உ.சி., மைதானம் சென்றடைந்தது; கல்லுாரி மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.அதன்பின், தேர்தலில் ஓட்டளிக்க வேண்டிய அவசியத்தை வலியுறுத்தி, ஒவ்வொரு சட்டசபை தொகுதியிலும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக, 11 வாகனங்கள் தருவிக்கப்பட்டுள்ளன. அவ்வாகனங்களின் இயக்கத்தை, கலெக்டர் துவக்கி வைத்தார். பின், தேசிய வாக்காளர் தின உறுதிமொழி ஏற்கப்பட்டது.தேசிய வாக்காளர் தினத்தையொட்டி, பள்ளி, கல்லுாரி மாணவ மாணவியருக்கு விழிப்புணர்வு போஸ்டர் தயாரிக்கும் போட்டி நடத்தப்பட்டது. பி.எஸ்.ஜி., தொழில்நுட்ப கல்லுாரி மாணவன் சுதர்சன் முதலிடம், பொள்ளாச்சி வாணவராயர் வேளாண் கல்லுாரி மாணவி லோகேஸ்வரி இரண்டாமிடம், கோவை அரசு கலை அறிவியல் கல்லுாரி மாணவன் மனோஜ்குமார் மூன்றாமிடம் பெற்றனர்.பள்ளிகள் அளவிலான போட்டியில், ஆனைமலை வி.ஆர்.டி., பெண்கள் பள்ளி மாணவி பூமஸ்ரீ முதலிடம், சூலுார் அரசு பெண்கள் பள்ளி மாணவி பனிமலர் இரண்டாமிடம், ஒப்பணக்காரவீதி சி.ஜி.எஸ்., மாணவி பள்ளி ஜெஸ்லட் ப்ளோரா மூன்றாமிடம் பெற்றனர். முதல் பரிசாக ரூ.2,000, இரண்டாம் பரிசு ரூ.1,000, மூன்றாம் பரிசு ரூ.500 மற்றும் சான்றிதழை, கலெக்டர் வழங்கினார். பாட்டு போட்டி, கோலப்போட்டி, இன்லேன்ட் லெட்டர் எழுதும் போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ், ரொக்கப்பரிசு, சிறப்பாக பணிபுரிந்த ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு கேடயம் வழங்கப்பட்டது.அதில், கலெக்டர் கிராந்திகுமார் பேசியதாவது:
18 வயது நிறைவடைந்த ஒவ்வொருவருக்கும் தேர்தலில் ஓட்டளிக்கும் உரிமை உள்ளது. கிராமப்புறங்கள் மற்றும் அதிகம் படித்த மக்கள் வசிக்கும் பகுதிகளில் ஓட்டுப்பதிவு குறைவாக இருக்கிறது. அனைவரும் இணைந்து இந்நிலையை மாற்ற வேண்டும். இளைஞர்கள் அனைவரும் கட்டாயம் ஓட்டளிக்க வேண்டும்.கோவை மாவட்டத்தில் ஒன்றிணைந்து செயல்பட்டு ஓட்டுப்பதிவு சதவீதத்தை அதிகரிக்க வேண்டும். கல்லுாரிகளில் இளம் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. புதிய வாக்காளர்கள் ஓட்டளிப்பதை ஊக்குவிக்க வேண்டும்.இவ்வாறு, கலெக்டர் பேசினார்.நிகழ்ச்சியில், தேர்தல் விழிப்புணர்வு பிரதிநிதி ஸ்வர்ணலதா, மகளிர் திட்டம் திட்ட மேலாளர் சந்திரா உட்பட பலர் பங்கேற்றனர்.