அரசு பள்ளிகளில் பாடம் நடத்த தன்னார்வலர்களுக்கு தடை
அரசு பள்ளிகளில் பாடம் நடத்த தன்னார்வலர்களுக்கு தடை
UPDATED : ஜன 29, 2024 12:00 AM
ADDED : ஜன 30, 2024 07:47 AM
தமிழகத்தில் செயல்படும், 35,000க்கும் மேற்பட்ட அரசு பள்ளிகளில், ஒரு கோடிக்கும் அதிகமான மாணவ, மாணவியர் படிக்கின்றனர். நிரந்தரமாக 2.5 லட்சத்துக்கும் மேலான ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்.நடப்பு கல்வியாண்டில், மாணவ - மாணவியரின் எண்ணிக்கைப்படி, அவர்களுக்கு பாடம் நடத்த, 13,000ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது. இதை சமாளிக்க, பெற்றோர் ஆசிரியர் கழகம் வழியாக தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இருப்பினும், பல மாவட்டங்களில் ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது.இதனால், சில அரசு பள்ளிகளில், இல்லம் தேடி கல்வித் திட்டத்தில் பணியாற்றி வரும் தன்னார்வலர்களை, மாணவர்களுக்கு பாடம் எடுக்க, தலைமை ஆசிரியர்கள் பயன்படுத்துவதாக பள்ளிக்கல்வித் துறைக்கு புகார்கள் வந்துள்ளன.எனவே, பள்ளிகளில், நிரந்தர ஆசிரியர்கள், தற்காலிக ஆசிரியர்கள், சிறப்பு பாடங்களுக்கு பகுதி நேர ஆசிரியர்கள் மட்டுமே பாடம் நடத்த வேண்டும். தன்னார்வலர்களை பாடம் நடத்த பயன்படுத்தினால், சம்பந்தப்பட்ட தலைமை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் வழியே, பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.