உயர்கல்வி நிறுவனங்களுக்கான அங்கீகார முறையில் மாற்றம்
உயர்கல்வி நிறுவனங்களுக்கான அங்கீகார முறையில் மாற்றம்
UPDATED : ஜன 29, 2024 12:00 AM
ADDED : ஜன 30, 2024 10:11 AM
இதுகுறித்து, மத்திய அரசின் பல்கலை மானிய குழுவான, யு.ஜி.சி., வெளியிட்டுள்ள அறிவிப்பு:
கடந்த, 2020ல் உருவாக்கப்பட்ட புதிய கல்வி கொள்கை, நாடு முழுதும் அமலுக்கு வந்துள்ளது. உயர்கல்வியில் மாணவர் சேர்க்கையை, 2037ம் ஆண்டிற்குள், 50 சதவீதமாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. சர்வதேச அளவிலான கல்வி நிறுவனங்களுடன் போட்டியிடும் அளவுக்கு, இந்திய உயர்கல்வி நிறுவனங்கள், கல்வி தரத்தை உயர்த்தி வழங்க வேண்டிய நிலையில் உள்ளன.இதற்காக, உயர்கல்வி நிறுவனங்களுக்கான அங்கீகாரம் மற்றும் தரவரிசையில், மாற்றங்களை ஏற்படுத்துவது குறித்து ஆய்வு செய்ய, இஸ்ரோ முன்னாள் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில், 2022ல் நிபுணர் குழு அமைக்கப்பட்டது.இந்த குழுவின் முதல் கட்ட அறிக்கை ஏற்கனவே இணையதளத்தில் வெளியிடப்பட்டு, பொதுமக்கள் மற்றும் கல்வியாளர்களின் கருத்துகள் பெறப்பட்டுள்ளன. கடந்த, 16ம் தேதி, இறுதி அறிக்கை மத்திய அரசிடம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதை, மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பெற்றுக்கொண்டார்.மாற்றங்கள் என்ன?
இறுதி அறிக்கையில் பரிந்துரைத்தபடி, பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளுக்கான அங்கீகாரம் வழங்குவதில் மாற்றங்கள் கொண்டு வரப்படுகின்றன.பைனரி அங்கீகாரம் என்ற முறையில், அங்கீகாரம் வழங்கப்பட்டது அல்லது அங்கீகாரம் அளிக்கப்படவில்லை என, முடிவு செய்து சான்றிதழ் வழங்கப்படும். சர்வதேச அளவில், பல நாடுகளில் இந்த நடைமுறை அமலில் உள்ளது.கல்வி நிறுவனங்களின் வசதிகள், கல்வித்தரம் ஆகியவற்றின் அடிப்படையில், நிலை -1 முதல், நிலை - 5 வரை அங்கீகாரம் வழங்கப்படும்.நிலை - 4 வரையுள்ள கல்வி நிறுவனங்கள், தேசிய அளவிலான நிறுவனங்களாக இருக்கும். நிலை - 5 பெறும் நிறுவனங்கள், பல்வகை ஆராய்ச்சி மற்றும் கல்வியில், சர்வதேச தரம் பெறுவதாக கருதப்படும்இந்த மாற்றங்களை நடைமுறைப்படுத்த, தேசிய தர அங்கீகாரம் வழங்கும், &'நாக்&' கமிட்டி முடிவு செய்துள்ளது. வரும் கல்வி ஆண்டு முதல் இந்த புதிய மாற்றங்கள் அமலுக்கு வரும்.இன்னும் நான்கு மாதங்களில், பைனரி அங்கீகார முறையும், இந்த ஆண்டு டிசம்பரில், அடுத்த கட்ட அங்கீகார முறையும் அமலுக்கு வரும். இதன் விபரங்களை, www.ugc.gov.in/Notices என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.