UPDATED : ஜன 29, 2024 12:00 AM
ADDED : ஜன 30, 2024 07:45 AM
புதுடில்லி:
பல்கலைகளில், எஸ்.சி., எஸ்.டி., மற்றும் ஓ.பி.சி., பிரிவினருக்காக ஒதுக்கப்பட்ட பணியிடங்கள் குறித்து யு.ஜி.சி., அறிவித்த புதிய வழிமுறைக்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, இது தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.யு.ஜி.சி., எனப்படும் பல்கலை மானியக் குழு, உயர் கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீட்டை நடைமுறைபடுத்துவது தொடர்பான வழிமுறைகளில் சில மாற்றங்களை செய்துள்ளது. இது தொடர்பான வரைவு நடைமுறைகள், அதன் இணையதளத்தில் வெளியிடப்பட்டு, மக்களின் கருத்துகள் கோரப்பட்டுள்ளன.இந்த வரைவு நடைமுறைகளில் கூறப்பட்டுள்ளதாவது:
உயர் கல்வி நிறுவனங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும்போது, எஸ்.சி., அல்லது எஸ்.டி., அல்லது ஓ.பி.சி., எனப்படும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில், அந்தந்த பிரிவினரையே தேர்வு செய்ய வேண்டும்.ஒருவேளை, இவ்வாறு ஒதுக்கப்பட்ட பணியிடங்களுக்கு, அந்த பிரிவைச் சேர்ந்தவர்கள் போதுமான அளவுக்கு விண்ணப்பிக்காத நிலையில், தற்காலிக நடவடிக்கையாக, அந்த இட ஒதுக்கீட்டை திரும்ப பெறலாம். பொதுப் பிரிவைச் சேர்ந்தவர்களை அதற்கு நியமிக்கலாம்.நேரடி நியமனங்களில் இட ஒதுக்கீட்டை திரும்பப் பெறுவதற்கு பொதுவான தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், அரிய நிகழ்வாக அல்லது வேறு வழியில்லாத நிலையில் இட ஒதுக்கீட்டை திரும்பப் பெறலாம்.இவ்வாறு இட ஒதுக்கீட்டை திரும்பப் பெறுவது தொடர்பாக அறிவிக்க சில நடைமுறைகளை பின்பற்ற வேண்டும். இதன்படி, அந்த இடத்தை நிரப்ப எடுக்கப்பட்ட முயற்சிகள், இட ஒதுக்கீட்டை திரும்பப் பெறும் முடிவை எடுத்ததற்கான காரணங்களை தெரிவிக்க வேண்டும்.பல்கலைகளில் உள்ள குரூப் ஏ மற்றும் பி பிரிவு பணியிடங்களுக்கு, மத்திய கல்வி அமைச்சகத்துக்கு முழு விபரங்களை அனுப்பி ஒப்புதல் பெற வேண்டும். குரூப் சி மற்றும் டி பிரிவுக்கு, பல்கலையின் செயற்குழுவின் ஒப்புதல் பெற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.இதற்கிடையே, இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதாக கூறி, எதிர்க்கட்சிகள் அதிருப்தி தெரிவித்திருந்தன. இதையடுத்து, மத்திய கல்வி நிறுவனங்களில் கடந்த காலங்களில் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்படவில்லை. எதிர்காலத்திலும் இது தொடரும்.காலி பணியிடங்களை ஒருங்கிணைந்த நடவடிக்கை வாயிலாக நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என, யு.ஜி.சி., விளக்கம் அளித்துள்ளது.