அரையாண்டு தேர்வில் முதலிடம் தேசியக்கொடி ஏற்றிய மாணவி
அரையாண்டு தேர்வில் முதலிடம் தேசியக்கொடி ஏற்றிய மாணவி
UPDATED : ஜன 30, 2024 12:00 AM
ADDED : ஜன 30, 2024 09:43 AM
சிங்காடிவாக்கம்:
வாலாஜாபாத் ஒன்றியம், சிங்காடிவாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளியில், தினமும் தலைமை ஆசிரியர் கலாவல்லி அருள் தேசியக்கொடி ஏற்றி, இறைவணக்கம் நடத்தி வருகிறார்.இந்நிலையில், சமீபத்தில் நடந்த அரையாண்டு தேர்வில், பிளஸ் 2 பயிலும் மாணவி இன்பஸ்ரீ, பள்ளியில் முதலிடம் பிடித்தார்.இம்மாணவியை பெருமைப்படுத்தும் விதமாகவும், மாணவர்களுக்கு கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையிலும், முதலிடம் பிடித்த மாணவி இன்பஸ்ரீயை, தலைமை ஆசிரியர் நிலையில் நிறுத்தி, தேசியக்கொடியை ஏற்ற வைத்து, இறைவணக்கக் கூட்டத்தை தலைமையேற்று நடத்தித் தர பள்ளி தலைமை ஆசிரியர் கலாவல்லி அருள் ஏற்பாடு செய்தார்.அதன்படி, பள்ளி மேலாண்மைக் குழுவில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து அரையாண்டு தேர்வில், முதலிடம் பெற்ற பிளஸ் 2 மாணவி இன்பஸ்ரீ, தங்களது பள்ளி தலைமை ஆசிரியரை போன்று, தேசியக்கொடி ஏற்றினார்.இறைவணக்கக் கூட்டத்தில் மாணவர்களுக்கு சிறிய கதை கூறி, உரை நிகழ்த்தினார். தொடர்ந்து, குடியரசு தின விழாவில் சிறப்பாக உரையாற்றிய மாணவர்களுக்கு பரிசு வழங்கினார்.மேலும், நேற்று மாலை பள்ளி வளாகத்தில் நடைபெற்ற தமிழ்க்கூடல் நிகழ்விலும் மாணவி இன்பஸ்ரீயை, தலைமை ஆசிரியர் அருகில் அமர வைத்து அவருக்கு பொன்னாடை போர்த்தி கவுரவித்தார்.