திறனாய்வு தேர்வுக்கு சிறப்பு பயிற்சி வகுப்பு நடத்தணும்: கல்வியாளர்கள் வலியுறுத்தல்
திறனாய்வு தேர்வுக்கு சிறப்பு பயிற்சி வகுப்பு நடத்தணும்: கல்வியாளர்கள் வலியுறுத்தல்
UPDATED : பிப் 03, 2024 12:00 AM
ADDED : பிப் 03, 2024 09:27 AM
உடுமலை:
அரசுப்பள்ளிகளில், மாணவர்களுக்கான திறனாய்வுத்தேர்வுகளுக்கு, சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடத்த, கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு கல்வியாண்டிலும், அரசுப்பள்ளிகளில் படிக்கும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு, தேசிய வருவாய்வழி திறனாய்வுத்தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வில் தேர்ச்சி பெறுவோருக்கு, ஆண்டுதோறும் 12 ஆயிரம் ரூபாய் என, அவர்களின் மேல்நிலை வகுப்பு முடிக்கும் வரை, மாணவர்களின் வங்கிக்கணக்கில் செலுத்தப்படுகிறது.மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துவதற்கான தேர்வாகவும், இடைநிற்றல் இல்லாமல் பள்ளி படிப்பை முடிப்பதற்கானவும் இத்தேர்வு உள்ளது. இருப்பினும் இத்தேர்வுக்கான முக்கியத்துவம், பெரும்பான்மையான பள்ளிகளில் இல்லை.பொருளாதார நிலையில் பின்தங்கியுள்ள குழந்தைகளுக்கு, இத்தேர்வின் வாயிலாக பெறும் உதவித்தொகை, அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் உள்ளது.சில பள்ளிகளில், திறனாய்வு தேர்வுக்கான மாதிரித்தேர்வுகள் நடத்தப்படுகிறது. பழைய தேர்வுகளின் வினாத்தாள்களை வைத்தும், ஆசிரியர்கள் தயார் செய்த வினாக்களை வழங்கியும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கின்றனர்.ஆனால் இத்தகைய பள்ளிகளின் எண்ணிக்கை மிக குறைவாக உள்ளது. திறனாய்வுத்தேர்வின் முக்கியத்துவம் குறித்தும், மாணவர்களுக்கு போதிய விழிப்புணர்வு இருப்பதில்லை.பள்ளிகளில் இத்தேர்வு குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.மாணவர்கள் திறனாய்வுத்தேர்வு எழுதுவதற்கு, பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் தேவையாக உள்ளது. மாவட்ட அளவில், உடுமலை, குடிமங்கலம் மற்றும் மடத்துக்குளம் பகுதிகளில் குறிப்பிட்ட பள்ளிகளைச்சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை தான், தேர்ச்சி பெறுவதில் அதிகமாக உள்ளது.இந்த நிலையை மாற்றுவதற்கு, அனைத்து அரசுபள்ளி மாணவர்களுக்கும் கூடுதல் பயிற்சி வழங்க, கல்வித்துறை சிறப்பு நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கல்வியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.