மாணவ, மாணவியர் மனதை அள்ளிய பட்டாம்பூச்சி, பறவைகள் கண்காட்சி
மாணவ, மாணவியர் மனதை அள்ளிய பட்டாம்பூச்சி, பறவைகள் கண்காட்சி
UPDATED : பிப் 04, 2024 12:00 AM
ADDED : பிப் 04, 2024 09:08 AM
போத்தனூர்:
கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் நடந்த பட்டாம்பூச்சிகள், பறவைகளின் புகைப்பட கண்காட்சியை, மாணவர்கள், பொதுமக்கள் பார்வையிட்டனர்.ஆண்டுதோறும் பிப்., 2ம் தேதி உலக சதுப்பு நில நாள் கடைபிடிக்கப்படுகிறது. இதனையொட்டி கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில், பட்டாம்பூச்சிகள், பறவைகள், பூச்சிகள் குறித்த விழிப்புணர்வு புகைப்பட கண்காட்சி, நேற்று வெள்ளலூர் குளக்கரையில் நடந்தது.தமிழ்நாடு இயற்கை, பட்டாம்பூச்சிகள் அமைப்பின் ரமணாசரண் பட்டாம்பூச்சிகள் குறித்து, பார்வையாளர்களுக்கு விளக்கினார். பறவைகள் குறித்து, கோயம்புத்தூர் இயற்கை அமைப்பின் சரஸ்வதி, சவுந்தரராஜ். நாகராஜ் ஆகியோர் எடுத்துரைத்தனர்.சதுப்பு நிலம் குறித்து, கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பின் மணிகண்டன் பேசுகையில், ஈர நிலங்களில் பூச்சிகள், பறவைகள், பட்டாம்பூச்சிகள் வாழும் சூழல் உள்ளது. நாம் இவற்றை பாதுகாப்பதன் மூலம், நீர் வளத்தையும் காக்க முடியும், என்றார்.ராகுல், கார்த்திகேயன் பறவை, பூச்சிகளின் புகைப்படங்களை காட்சிப்படுத்தினர். கிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரி மாணவர்கள், தன்னாவலர்களாக செயல்பட்டனர்.சூலூர் விமானப்படை பள்ளி, பாண்டியன் மெட்ரிக்., பள்ளி, டோரா, பெர்க்ஸ் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள் என, 500க்கும் மேற்பட்டோர் கண்காட்சியை பார்வையிட்டனர்.