UPDATED : பிப் 05, 2024 12:00 AM
ADDED : பிப் 05, 2024 09:34 AM
மாமல்லபுரம்:
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த க்ரிஸ்டோபர் ஸ்டீவன் க்ரீன், 70, என்பவர், வெளிநாட்டு சுற்றுலாவின்போது, மடக்கு சைக்கிளில் ஆர்வத்துடன் பயணம் செய்து வருகிறார்.தற்போது தமிழகத்திற்கு சுற்றுலா வந்துள்ள அவர், நேற்று முன்தினம், சென்னையிலிருந்து மாமல்லபுரத்திற்கு, கிழக்கு கடற்கரை சாலை வழியே, மடக்கு சைக்கிளில் பயணம் செய்தார்.அவர் கூறியதாவது:
இங்கிலாந்து நாட்டின் மான்செஸ்டர் பல்கலை விரிவுரையாளராக, முன்பு பணியாற்றியுள்ளேன். எங்கள் நாட்டில், அலுவலகத்திற்கோ அல்லது வேறு இடங்களுக்கு ரயிலில், பேருந்தில் பயணிக்கும் போது, மடக்கு சைக்கிளையும் பையில் வைத்து கொண்டு செல்வோம்.பயணம் முடிந்து இறங்கியதும், மற்ற இடங்களுக்கு உடன் வைத்திருக்கும் சைக்கிளில் தான் செல்வோம். கடந்த ஆண்டு இந்தியா வந்தபோது, கோவாவிலிருந்து மங்களூருக்கு மடக்கு சைக்கிளில் பயணம் செய்தேன். தற்போது, சென்னையிலிருந்து மாமல்லபுரத்திற்கு அதே சைக்கிளில் வந்துள்ளேன்.அடுத்து, புதுச்சேரிக்கு செல்கிறேன். சைக்கிளில் செல்வது மனதிற்கு உற்சாகம் அளிக்கிறது. உடல் நலத்தையும் பாதுகாக்கிறது. வயது முதிர்ந்தாலும், நீண்டதொலைவிற்கு என்னால் சைக்கிள் ஓட்ட முடிகிறது. சுற்றுச்சூழலுக்கும் தீங்கில்லை.இவ்வாறு அவர் கூறினார்.

