மாணவர்களுக்கு தலைமை பண்புகளை கற்றுத்தர வேண்டும்: இறையன்பு பேச்சு
மாணவர்களுக்கு தலைமை பண்புகளை கற்றுத்தர வேண்டும்: இறையன்பு பேச்சு
UPDATED : பிப் 07, 2024 12:00 AM
ADDED : பிப் 07, 2024 05:12 PM
பெண்ணாடம்:
மாணவர்களுக்கு தலைமை பண்புகளை ஆசிரியர்கள் கற்றுத்தர வேண்டும் என ஓய்வு பெற்ற தமிழக அரசின் தலைமை செயலர் இறையன்பு பேசினார்.கடலுார் மாவட்டம், பெண்ணாடம் அடுத்த இறையூரில் நடந்த பள்ளி விழாவில் அவர் பேசியதாவது:
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் மிகப்பெரும் சக்தியாக உள்ளன. பள்ளிகள் தான் மாணவர்களை கல்வியில் மேம்படுத்தி உலகின் பல்வேறு பகுதிகளில் உயர் பதவியில் அமர வைத்துள்ளது.அரசு பள்ளியில் புத்தகம், சீருடை, காலை, மதியம் உணவுகள் வழங்கப்படுகின்றன. அரசு பள்ளியில் தகுதி வாய்ந்த ஆசிரியர்கள், நுணுக்கம் பெற்ற ஆசிரியர்கள் உள்ளனர். இதனால் மாணவர்கள் சிறந்த கல்வியை பெற முடியும்.அரசு பள்ளியில் ஜாதி, மதம் அப்பாற்பட்டு இணக்கமாக படிக்கும் சூழல் ஏற்படும். அரசின் பாடத்திட்டங்களும் தரமாக உள்ளன. மாணவர்களுக்கு தலைமை பண்புகளை ஆசிரியர்கள் கற்றுத்தர வேண்டும். அப்போது தான் அவர்கள் வாழ்வில் உயர்ந்த நிலையை அடைய முடியும்.துணிவு உள்ளவர்களாகவும் மாறுவர். இன்றைய மாணவர்கள் எது இலக்கு என தெரியாமல் படிக்கின்றனர். மதிப்பெண் மட்டுமே பெரிதல்ல. அனைத்து நிலைகளையும் கடந்து வெற்றி பெற வேண்டும்.ஆசிரியர் என்பவர் சொல்லித் தருபவர்; ஆசான் என்பவர் வழிகாட்டுபவர். இப்பள்ளியில் ஆசிரியர்கள் ஆசானாகவே மாணவர்களுக்கு இருந்திருக்கின்றனர். இதனால் தான் இப்பள்ளி மாணவர்கள் மிகப்பெரிய பதவியிலும், பல நாடுகளிலும் முத்திரை பதித்து வருகின்றனர்.மாணவர்களுக்கு வாழ்க்கையில் உயர்ந்த நோக்கம் வேண்டும். துாய்மை மற்றும் நற்பண்புகளை கடைபிடிக்க வேண்டும். கற்றல் திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். இந்த மூன்றும் இருந்தால் மாணவர்களின் எதிர்காலம் பிரகாசமாக இருக்கும்.இவ்வாறு அவர் பேசினார்.