தி.மு.க., பொதுச்செயலாளருக்கு ஜாக்டோ -ஜியோ கோரிக்கை
தி.மு.க., பொதுச்செயலாளருக்கு ஜாக்டோ -ஜியோ கோரிக்கை
UPDATED : பிப் 08, 2024 12:00 AM
ADDED : பிப் 08, 2024 09:38 AM
ராமநாதபுரம்:
தமிழகத்தில் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வரும் ஜாக்டோ- ஜியோ அமைப்பினர் முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதி எந்த பிரயோஜனமும் இல்லாததால், தற்போது தி.மு.க., பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு தங்களது கோரிக்கைகளை எடுத்து சொல்லி நிறைவேற்றித்தருமாறு கடிதம் எழுதியுள்ளனர்.இதில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பழைய ஓய்வூதிய திட்டத்தினை செயல்படுத்த வேண்டும். முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண், ஒப்படைப்பு, உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு வழங்க வேண்டும். ஆசிரியர்கள், உடற்கல்வி ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும்.சிறப்பு கால முறை ஊதியம் பெற்று வரும் சத்துணவு, அங்கன்வாடி, கிராம உதவியாளர்கள், ஊராட்சி செயலர்கள், துாய்மை பணியாளர்கள், எம்.ஆர்.பி., செவிலியர்கள் ஆகியோருக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும்.கல்வித்துறையில் அரசாணை 243 ரத்து செய்ய வேண்டும், என்பது உட்பட கோரிக்கைளை வலியுறுத்தி ஜன.22 முதல் 24 வரை பிரசார இயக்கம், ஜன.30ல் மாவட்ட தலைநகரங்களில் மறியல் போராட்டம் நடந்தது. பிப்.5 முதல் 9 வரை அரசியல் கட்சித்தலைவர்களை சந்தித்து ஆதரவு கோருவது.பிப்.10 ல் மாவட்ட அளவில் வேலை நிறுத்த ஆயத்த மாநாடு நடத்துவது, பிப்.15ல் அடையாள வேலை நிறுத்தம். பிப்.26 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்வது என முடிவு செய்துள்ளோம். 20 ஆண்டு கால கோரிக்கைகளை நிறைவேற்றிட வேண்டும் என கடிதத்தில் ஜாக்டோ- ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.