பள்ளி மேலாண்மை குழுக்களுக்கு பயிற்சி: பெற்றோர் ஆசிரியர்கள் பங்கேற்பு
பள்ளி மேலாண்மை குழுக்களுக்கு பயிற்சி: பெற்றோர் ஆசிரியர்கள் பங்கேற்பு
UPDATED : பிப் 08, 2024 12:00 AM
ADDED : பிப் 08, 2024 09:40 AM
தேனி:
தேனி அருகே மாவட்ட அளவிலான பள்ளி மேலாண்மை குழு மாநாடு நடந்தது.அரசுப்பள்ளிகளில் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் பற்றி ஆலோசிப்பதற்காக பள்ளிதலைமை ஆசிரியர், பெற்றோர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், முன்னாள் மாணவர்களை உள்ளடக்கி மேலாண்மை குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இக்குழுக்கள் மாதம் ஒருமுறை கூடி பள்ளி வளர்ச்சி குறித்து ஆலோசிக்க வேண்டும்.மாவட்டத்தில் உள்ள 530 பள்ளி மேலாண்மை குழுக்களுக்கும் பயிற்சி வழங்கும் வகையில் கம்மவார் சங்க பொறியியல் கல்லுாரியில் மாநாடு நடத்தப்பட்டது.இம்மாநாட்டிற்கு கலெக்டர் ஷஜீவனா தலைமை வகித்தார். ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் அபிதாஹனிப், கலெக்டர் நேர்முக உதவியாளர் பிரகாஷ், பள்ளிகல்வித்துறை திட்ட இயக்க அலுவலக அலுவலர் நவீன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பேசுகையில், தலைமை ஆசிரியரகள் பள்ளிகளில் துாய்மைப்பணியை கண்காணிக்க வேண்டும். கழிப்பறைகள் முறையாக சுத்தம் செய்வதை உறுதிப்படுத்த வேண்டும். பள்ளி மேலாண்மை குழுவினர் கிராமசபையில் பங்கேற்று பள்ளிக்கு தேவையானவற்றை தெரிவிக்க வேண்டும் என்றார்.ஆசிரிய கருத்தாளர் முத்தழகு குழுவிற்கு ஆலோசனை வழங்கினார். காலை அமர்வில் ஆண்டிப்பட்டி, பெரியகுளம், மயிலாடும்பாறை பகுதிகளைச் சேர்ந்த 325 பள்ளி குழுக்களும், மதிய அமர்வில் தேனி, போடி, சின்னமனுார், உத்தமபாளையம், கம்பம் பகுதியை சேர்ந்த 205பள்ளி குழுவினரும் பங்கேற்றனர்.ஏற்பாடுகளை பள்ளி கல்வித்துறை உதவி திட்ட அலுவலர்கள் சேதுராமன், மோகன், சி.இ.ஓ., நேர்முக உதவியாளர்கள் பெருமாள்சாமி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.