UPDATED : பிப் 08, 2024 12:00 AM
ADDED : பிப் 08, 2024 09:43 AM
சிவகங்கை:
சிவகங்கையில் நடைபெற்ற புத்தக கண்காட்சியில் ரூ.2.25 கோடிக்கு புத்தகங்கள் விற்பனை ஆனது. கடந்த ஆண்டை விட விற்பனை குறைவு தான் என கலெக்டர் ஆஷா அஜித் பேசினார்.சிவகங்கை மன்னர் மேல்நிலை பள்ளி வளாகத்தில் ஜன., 27 முதல் பிப்., 6 வரை புத்தக திருவிழா மற்றும் கண்காட்சி நடைபெற்றது.பபாசி, மாவட்ட நிர்வாகம், கல்வி, நுாலகத்துறை இணைந்து நடத்தினர். 110 ஸ்டால்களில் 10 ஆயிரம் தலைப்புகளில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட புத்தகங்கள் விற்பனைக்கு வந்தன. நேற்று முன்தினம் இரவு புத்தக கண்காட்சி நிறைவு விழா நடைபெற்றது.விழாவில் திருப்புவனம் பேரூராட்சி சார்பில் ரூ.1.50 லட்சத்திற்கு புத்தகத்தை கலெக்டரிடம் பேரூராட்சி தலைவர் சேங்கைமாறன் வாங்கினார். பல்வேறு அமைப்பினர் சார்பில் மொத்தமாக புத்தகம் வாங்கி சென்றனர். நிகழ்ச்சிகளை அரசு மகளிர் கல்லுாரி பேராசிரியை ஹேமமாலினி தொகுத்து வழங்கினார்.கலெக்டர் பேசியதாவது:
இந்த ஆண்டு இக்கண்காட்சி மூலம் ரூ.2.25 கோடிக்கு புத்தகம் விற்பனை ஆனது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு புத்தக விற்பனை குறைவு தான். இருப்பினும், பெண்கள் குடும்பத்தாருடன் வந்து புத்தகங்களை வாங்கி சென்றதை பெருமையாக கருதுகிறேன்.பள்ளி, கல்லுாரி மாணவர்கள் அதிகளவில் பார்வையிட்டு, வாசிப்பை நேசிக்க தொடங்கினர். இதற்காக கடந்த 11 நாட்களாக அனைத்து துறை அலுவலர், ஊழியர்கள் சிறப்பாக பணியாற்றினர், என்றார்.பபாசி செயலாளர் முருகன் ஏற்புரை நிகழ்த்தினார். மாவட்ட வருவாய் அலுவலர் மோகனச்சந்திரன், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஆர்.சிவராமன், கோட்டாட்சியர்கள் சிவகங்கை சுகிதா, தேவகோட்டை பால்துரை, மாவட்ட மகளிர் திட்ட இயக்குனர் கவிதப்பிரியா, மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் ரவிச்சந்திரன், தாசில்தார்கள் பங்கேற்றனர். மன்னர் மேல்நிலை பள்ளி தலைமை ஆசிரியர் சுந்தரராஜன் நன்றி கூறினார்.