UPDATED : பிப் 09, 2024 12:00 AM
ADDED : பிப் 09, 2024 09:34 AM
மதுரை:
மாறிவரும் புதிய தொழில்நுட்பங்களை மாணவர்கள் கற்பது அவசியம் என மதுரையில் நடந்த தினமலர் பட்டம் இதழ் நடத்திய வினாடி வினா விருது போட்டி பரிசளிப்பு விழாவில் மதுரை காமராஜ் பல்கலை துணைவேந்தர் குமார் அறிவுறுத்தினார்.அவர் பேசியதாவது:
மாணவர்கள் நலன் கருதி தினமலர் நாளிதழ் பல ஆண்டுகளாக தொடர்ந்து சேவையாற்றி வருவது பாராட்டுக்குரியது. தற்போது ஆறாம் வகுப்பு மாணவர்களுக்கே புதிய வாய்ப்புகளும் சவால்களும் காத்திருக்கின்றன. ஒரு புராஜெக்ட் தயாரிக்க வேண்டும் என்றால் நுாலகங்களை தேடி ஓடிய காலம் இருந்தது.ஆனால் தற்போது சாட் ஜிபிடி என்ற சாப்ட்வேர் அதற்கு தேவையான மொத்த டேட்டாவையும் கொடுத்து விடுகிறது. கூகுளிலும் இதுபோன்ற டூல்ஸ்கள் அதிகம் கிடைக்கின்றன. இதற்கு ஆர்ட்டிபிசியல் இன்டலிஜென்ஸ் (ஏ.ஐ.,) தொழில்நுட்பங்கள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. இதற்கு அடிப்படை மெஷின் லேர்னிங், டேட்டா கலெக் ஷன் தான். ஒரு பைனாகுலரில் பூவை பார்த்தால் அதன் குடும்ப வகை, ஆயுள்காலம் உள்ளிட்ட அனைத்து விவரங்களை சொல்லும் தொழில்நுட்பங்கள் வந்துவிட்டன. தொழில்நுட்பம் விஷயத்தில் மாணவர்கள் எப்போதும் அப்டேட் ஆக இருக்க வேண்டும் என்றார்.மாணவருக்கு பயன்படும் தினமலர்
மதுரை குயின் மீரா சர்வதேச பள்ளி முதல்வர் அனிதா பேசியதாவது: மாணவர்கள் பலர் நாளைய தலைவர்களாகும் வாய்ப்புள்ளது. மாணவர்கள் அறிவியல் உள்ளிட்ட எந்த துறையை தேர்வு செய்தாலும் அந்த துறையில் உள்ள அனைத்து விஷயங்களையும் தெரிந்து வைத்திருத்தல் வேண்டும்.இதுபோன்ற தேடுதலுக்கு தினமலர் பட்டம் நாளிதழ் மாணவர்களுக்கு பயனுள்ளதாக உள்ளது. மாணவர்கள் வாழ்நாள் முழுவதும் படிப்பதை விட்டுவிடக் கூடாது. பள்ளி முடித்து செல்லும் மாணவர்கள் ஒரு புதிய உலகத்திற்குள் செல்ல வேண்டும். அதற்கு ஏற்பட தங்களின் திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்றார்.