பள்ளி போக்குவரத்து தன்னார்வலர்கள் திட்டத்தை துவக்கிய கமிஷனர்
பள்ளி போக்குவரத்து தன்னார்வலர்கள் திட்டத்தை துவக்கிய கமிஷனர்
UPDATED : பிப் 10, 2024 12:00 AM
ADDED : பிப் 10, 2024 09:38 AM
சென்னை:
போக்குவரத்து போலீசார், மாணவர்களுக்கு பாதுகாப்பான பயணச்சூழலை உருவாக்கும் விதமாக, பள்ளி போக்குவரத்து தன்னார்வலர்கள் என்ற புதிய திட்டத்தை உருவாக்கி உள்ளது.சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோட், தி.நகரில் உள்ள வித்யோதயா மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில், இத்திட்டத்தை நேற்று துவக்கினார். இந்நிகழ்ச்சியில், 500 மாணவர்கள், ஆசிரியர்கள், கூடுதல் கமிஷனர் சுதாகர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.இத்திட்டம் குறித்து, போலீசார் கூறியதாவது:
ஒவ்வொரு பள்ளிகளிலும், போக்குவரத்து தன்னார்வ தொண்டர்கள் உருவாக்கப்படுவர். இவர்கள், பள்ளியைச் சுற்றி, போக்குவரத்து ஒழுங்குப்படுத்தும் பணிகளில் ஈடுபடுவர். பெற்றோருக்கும், சாலை விதிமுறை குறித்து எடுத்துரைப்பர்.இத்திட்டம், கல்வி மற்றும் பயிற்சியில் மாணவர்கள் கவனம் செலுத்துவதுடன், போக்குவரத்து விதிகள் மற்றும் சாலையில் உள்ள பொறுப்புகளை அறிந்து கொள்வர். சென்னையில் உள்ள நான்கு பள்ளிகளிலும் இத்திட்டம் துவங்கப்பட்டுள்ளது. இந்த முயற்சி வெற்றி பெற்றவுடன், மற்ற பள்ளிகளிலும், இத்திட்டம் விரிவுப்படுத்தப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.