UPDATED : பிப் 12, 2024 12:00 AM
ADDED : பிப் 12, 2024 09:53 AM
திருப்பூர்:
அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆய்வக உதவியாளர்களுக்கு ஆய்வக பராமரிப்பு தவிர, இதர பணிகளை வழங்கக்கூடாது, செய்முறைத்தேர்வுக்கு மாணவர்களை, ஆய்வக உதவியாளர்கள் தயார்படுத்த வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.ஆறு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த அடல் டிங்கரிங் ஆய்வகம், உயர் தொழில்நுட்ப கணிணி ஆய்வகம், மெய்நிகர் வகுப்பறை, இயற்பியல், வேதியியல், மொழி, தொழிற்கல்வி, கணித ஆய்வகங்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் செயல்பட்டு வருகின்றன.இந்த ஆய்வகங்கள் பள்ளி மாணவர்களின் அறிவியல் சிந்தனை மற்றும் புதிய கண்டுபிடிப்புகளை படைக்கும் திறனை மேம்படுத்துவதற்கு உந்துதலாக அமைந்து வருகிறது. இத்தகைய பள்ளிகளில் உள்ள ஆய்வகம் மற்றும் உபகரணங்களை பராமரிக்க, ஆய்வக உதவியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.இவர்கள், எதிர்வரும் செய்முறை தேர்வுக்கு மாணவ, மாணவியரை தயார்படுத்த வேண்டும்; ஆய்வக உதவியாளர் பணி தவிர, வேறு பணியில் ஈடுபடக்கூடாது, என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. முதன்மை கல்வி அலுவலர் தரப்பில் இருந்து, அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், ஆய்வக பணிகளில் உள்ளவர்களை நிர்வாக பணி, வேறு பணிக்கு அனுப்பி வைப்பதாக சில மாவட்டங்களில் தலைமை ஆசிரியர்கள் மீது குற்றச்சாட்டு எழுந்தது.அத்துடன், செய்முறை தேர்வுகள் விரைவில் நடக்கவுள்ளதால், அதற்கு மாணவர்களை ஆய்வக உதவியாளர்கள் தயார்படுத்த வேண்டும். ஆகையால், ஆய்வக உதவியாளர்களுக்கு வேறு பணி வழங்க கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது என்றனர்.