விழுப்புரத்தில் மினி டைடல் பார்க்; அடுத்த வாரம் துவக்குகிறார் ஸ்டாலின்
விழுப்புரத்தில் மினி டைடல் பார்க்; அடுத்த வாரம் துவக்குகிறார் ஸ்டாலின்
UPDATED : பிப் 12, 2024 12:00 AM
ADDED : பிப் 12, 2024 01:41 PM
சென்னை:
விழுப்புரத்தில் கட்டப் பட்டுள்ள, மினி டைடல் பார்க் கட்டடத்தை, முதல்வர் ஸ்டாலின் அடுத்த வாரம் துவக்கி வைக்கிறார்.தமிழக அரசுக்கு சென்னை தரமணியில், டைடல் பார்க் கட்டடம் உள்ளது. அங்கு, தகவல் தொழில்நுட்பம் சார்ந்த நிறுவனங்கள் செயல்படுகின்றன. அவற்றில், பல நுாறு இளைஞர்களுக்கு வேலை கிடைத்து உள்ளது.டைடல் நியோ
அத்துடன், டைடல் பார்க் அமைந்துள்ள பழைய மாமல்லபுரம் சாலையில் ஏராளமான ஐ.டி., நிறுவனங்களும் செயல்படுகின்றன. இதனால், பல மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்கள் வேலைக்காக சென்னை வருகின்றனர்.இதை தவிர்க்க, மாநிலம் முழுதும் தகவல் தொழில்நுட்ப துறை சார்ந்த வேலைவாய்ப்பை உருவாக்க, முக்கிய நகரங்களில், மினி டைடல் பார்க் கட்டும் பணியில் தமிழக அரசு ஈடுபட்டு உள்ளது.அதன்படி, முக்கிய நகரங்களில், 50,000 முதல் 1 லட்சம் சதுர அடியில் மினி டைடல் பார்க் கட்டப்படுகிறது. விழுப்புரம் மாவட்டம் வானுார் தாலுகாவில், திருச்சிற்றம்பலத்தில், 63,000 சதுர அடியில், டைடல் நியோ என்ற பெயரில் கட்டடம் கட்டப்பட்டுள்ளது.ரூ.31 கோடி
மொத்தம், 31 கோடி ரூபாய் செலவில், தரை தளம் மற்றும் நான்கு மாடிகளுடன் கட்டப்பட்டுள்ள அந்தக் கட்டடத்தை, முதல்வர் ஸ்டாலின் அடுத்த வாரம் துவக்கி வைக்கிறார். இதேபோல, வேலுாரில் அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில், 60,000 சதுர அடியில், தரை தளம் மற்றும் நான்கு தளங்களுடன் கூடிய மினி டைடல் பார்க் கட்டும் பணி, 2023 பிப்ரவரியில் துவங்கியது. அங்கும், வரும் ஜூனுக்குள் கட்டுமான பணிகளை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.