UPDATED : பிப் 14, 2024 12:00 AM
ADDED : பிப் 14, 2024 05:17 PM
காஞ்சிபுரம்:
காஞ்சிபுரம் நகரில், பொது நுாலகத்துறை கட்டுப்பாட்டில், பிள்ளையார்பாளையம், ஏகாம்பரநாதர் சன்னிதி தெரு மற்றும் ரங்கசாமிகுளம் அருகில் என, மூன்று கிளை நுாலகங்கள் இயங்கி வருகின்றன.இதில், ரங்கசாமிகுளம் அருகில் இயங்கும் அண்ணா கிளை நுாலகம், வாசகர்களுக்கு மட்டுமல்லாமல், போட்டித் தேர்வர்களுக்கு தயாராகும் இளைஞர்களுக்கு தேவையான புத்தக வசதியுடனும், டிஜிட்டல் நுாலகத்துடன் இயங்கி வருகிறது.இந்த நுாலக கட்டடத்தின் முதல் மாடியில், 50 லட்சம் ரூபாய் மதிப்பில், கூடுதல் கட்டடம் கட்டும் பணிகள் சமீபத்தில் துவங்கின. இந்நிலையில், நுாலக கட்டடத்தின் பழுதான பகுதிகளை சீரமைக்கவும், தரை, கழிப்பறை போன்ற பகுதிகளை சீரமைக்க வேண்டும் என வாசகர்களும், நுாலகத் துறையும் கேட்டு வந்தனர்.இதைத் தொடர்ந்து, பொதுப்பணித் துறை சார்பில், நுாலக கட்டடத்தை 20 லட்சம் ரூபாய் மதிப்பில், சீரமைக்க நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பணிகள் விரைவில் துவங்க உள்ளதாக நுாலகத் துறையினர் தெரிவிக்கின்றனர்.