UPDATED : பிப் 15, 2024 12:00 AM
ADDED : பிப் 15, 2024 11:48 AM
கோடம்பாக்கம்:
பார்வை மாற்றுத்திறனாளி கல்லுாரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள், ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கோடம்பாக்கத்தில் மறியலில் ஈடுபட்டனர். இதனால், ஒரு மணி நேரத்திற்கு கோடம்பாக்கம், வடபழனி, வள்ளுவர் கோட்டம் பகுதிகளில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.சென்னை கோடம்பாக்கம் மேம்பாலம் அருகே, நேற்று காலை 9:45 மணியளவில் பார்வை மாற்றுத்திறனாளிகள் 100க்கும் மேற்பட்டோர் திரண்டு, திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இவர்கள், பார்வையற்ற கல்லுாரி மாணவர்கள் மற்றும் பட்டதாரிகள் சங்கத்தைச் சேர்ந்தவர்.இவர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு நியமனத் தேர்வில் இருந்து முழுமையாக விலக்களித்து, உடனடியாக பட்டதாரி ஆசிரியர் பணி நியமனம் வழங்க வேண்டும்.தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக, பார்வை மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு தேர்வு நடத்த வேண்டும். ஊக்கத் தொகை 1,000த்தில் இருந்து 5,000 ரூபாயாக உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மறியல் போராட்டம் நடந்தது.இதனால், வள்ளுவர் கோட்டம், கோடம்பாக்கம் மற்றும் வடபழனி சுற்றுவட்டார பகுதிகளில், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சில் ஈடுபட்டனர்.ஆனால், தோல்வியில் முடிந்தது. அசம்பாவிதங்கள் நிகழாமல் இருக்கவும், போக்குவரத்தை சீர்செய்யவும் வேண்டி, போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டனர்.அவர்கள், போராட்டத்தில் ஈடுபட்டவர்களை குண்டுகட்டாக துாக்கி, சாலையில் இருந்து அப்புறப்படுத்தினர். பெண்களும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்ததால், மகளிர் போலீசார் வரவழைக்கப்பட்டு வலுக்கட்டாயமாக அப்புறப்படுத்தினர்.இதனால், ஒரு மணி நேரத்திற்கும் மேல், அப்பகுதி பதற்றமாக காட்சியளித்தது. பீக் ஹவர் வேளை என்பதால், பள்ளி, கல்லுாரி மற்றும் வேலைகளுக்கு செல்வோர் கடும் அவதிக்குள்ளாகினர்.இறக்கிவிட்ட போலீசார்
இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட பிஎச்.டி., மாணவர் கூறியதாவது:
ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற பார்வை மாற்றுத் திறனாளிகளுக்கு பணி நியமனம் செய்வது உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, மூன்று ஆண்டுகளாக போராடி வருகிறோம். கடந்த மூன்று நாட்களாக, ஐந்து பேர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், நேற்று முன்தினம் வள்ளுவர்கோட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட 27 பேரை கைது செய்த நுங்கம்பாக்கம் போலீசார், பல இடங்களில் சுற்ற வைத்து, அலைக்கழிப்புக்கு உள்ளாக்கினர். தொடர்ந்து, பூந்தமல்லி அருகே வேலுார் செல்லும் நெடுஞ்சாலையில் விடியற்காலையில் இறக்கி விட்டனர்.நேற்று, மாற்றுத்திறனாளிகள் கமிஷனர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட எங்களை கைது செய்து, கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இறக்கி விட்டு சென்றனர். அங்கிருந்து பேருந்தின்றி தட்டு தடுமாறி, மீண்டும் இங்கு வந்து போராட்டத்தில் ஈடுட்டு வருகிறோம். எம்.ஏ., பிஎச்.டி., படிப்பு முடித்து 10 ஆண்டுகள் கடந்தும், 5,000த்துக்கும் மேற்பட்டோர் இன்னும் வேலையின்றி உள்ளனர். எங்கள் துறை அமைச்சர் முதல்வர் தான்; அவரை சந்திக்க அனுமதி தருவதில்லை. கடந்த 2013ல் நாங்கள் போராட்டம் நடத்தினோம். அப்போது, எதிர்க்கட்சி தலைவராக இருந்த தற்போதைய முதல்வர் ஸ்டாலின், ராயப்பேட்டை மருத்துவமனையில் எங்களை சந்தித்து, ஆட்சிக்கு வந்தால் கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக வாக்குறுதி அளித்தார். ஆனால், அவரே வாக்குறுதியை நிறைவேற்றாமல் இருப்பது வருத்தமாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.