UPDATED : பிப் 15, 2024 12:00 AM
ADDED : பிப் 15, 2024 11:47 AM
சென்னை:
முதல்வர் கோரிக்கைகளை நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கையில், இன்று நடக்கவிருந்த ஒரு நாள் வேலைநிறுத்தப் போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பதாக, ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பு அறிவித்துள்ளது.அரசு ஊழியர், ஆசிரியர் சங்க கூட்டமைப்பான, ஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள், நேற்று முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசினர். பின், ஒருங்கிணைப்பாளர் அன்பரசு அளித்த பேட்டி:
தி.மு.க., ஆட்சிக்கு வந்த மூன்று ஆண்டுகளில் எங்களின் வாழ்வாதார கோரிக்கை நிறைவேற்றப்படாததால், போராட்டம் அறிவித்தோம். இன்று ஒருங்கிணைப்பாளர்கள் 30 பேரை முதல்வர் அழைத்து பேசினார். அமைச்சர்கள் எங்கள் கோரிக்கைகளை தெரிவித்ததாக கூறினார். அவரிடம், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவோம் என, தேர்தல் அறிக்கையில் தெரிவித்தீர்கள். பல மாநிலங்கள் நிறைவேற்றி விட்டன. தமிழகத்தில் நிறைவேற்ற வில்லை என சுட்டிக் காட்டினோம்.நிதி நிலைமை சீரானதும், கோரிக்கைகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றப்படும். நம்பிக்கையோடு இருங்கள்; விரைவில் கோரிக்கைகளை நிறைவேற்றுகிறேன் என முதல்வர் உறுதி அளித்தார்.முதல்வர் மீதான நம்பிக்கை அடிப்படையில், வேலைநிறுத்தத்தை தற்காலிகமாக ஒத்தி வைத்துள்ளோம்.