நாட்டுப்புற கலைகளை காட்சிப்படுத்தும் ராம்நகர் அருங்காட்சியகம்
நாட்டுப்புற கலைகளை காட்சிப்படுத்தும் ராம்நகர் அருங்காட்சியகம்
UPDATED : பிப் 17, 2024 12:00 AM
ADDED : பிப் 17, 2024 09:16 AM
பெங்களூர்:
பெங்களூரில் இருந்து, மைசூரு செல்லும் வழியில் 52 கி.மீ., துாரத்தில் ராம்நகர் மாவட்டத்தில் ஜனபதா லோகா எனும் நாட்டுப்புற கலைகளை காட்சிப்படுத்தும் அருங்காட்சியகம் அமைந்துள்ளது.கர்நாடகாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள அழகிய நாட்டுப்புற கலைகளை காட்சிப்படுத்தும் அருமையான அருங்காட்சியகம் இது. மாநிலத்தின் எண்ணற்ற நாட்டுப்புற கலைகளை கவனிப்பதற்கும், மாநிலத்தின் பாரம்பரியம் மற்றும் கலாசாரத்தை வெளிப்படுத்த இது சிறந்த வாய்ப்பை வழங்குவதால், சுற்றுலா பயணியர் இடையே மிகவும் பிரபலமாக உள்ளது.ஜனபத லோகாவின் பிரதான வளாகம், பழங்குடியினரின் கலை சின்னங்கள், அழகான கர்நாடக மாநிலத்தின் நாட்டுப்புற பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வடிவமைப்பால் பிரமாதமாக அலங்கரிக்கப்பட்டுள்ளது.அருங்காட்சியகத்தின் பிரதான நுழைவாயில், நந்தி கொடிகளுடன் இருபுறமும் இரண்டு துாண்களை கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. வாயில், இலைகளில் பொறிக்கப்பட்ட சிவன் மற்றும் விஷ்ணு முகத்துடன், பித்தளையால் செய்யப்பட்டுள்ளது.பிரதான வளாகத்திற்கு அடுத்ததாக இரண்டு மாடி கட்டடம் உள்ளது. இங்கு, பாரம்பரிய நாட்டுப்புற நடனத்தின் வெவ்வேறு பாணிகளை நிகழ்த்தும் பொம்மைகள் காட்சிப்படுத்தப்படுகின்றன.இந்த அருங்காட்சியகத்தின் மற்றொரு பகுதியில், நாட்டுப்புற கலைகளின் பழைய படங்களை காணலாம். குறிப்பாக, பல்வேறு பழங்குடியினரின் அரிய புகைப்படங்களை பார்க்கலாம்.இந்த புகைப்படங்கள், அருங்காட்சியகத்தின் நிறுவனர் நாகேகவுடா சேகரித்துள்ள கலை மற்றும் கலாசாரம் பற்றிய பயணத்தை காட்டுகின்றன. இதை பார்க்கும் போது, நாட்டுப்புறக் கலையின் மீது அவரது அபரிமிதமான ஆர்வத்தின் வெளிப்பாட்டை அறிந்து கொள்ளலாம்.இங்கு அமைந்துள்ள நுாலகத்தில், கர்நாடகாவின் நாட்டுப்புற கலாசாரத்தை விளக்கும் புத்தகங்களின் பெரிய தொகுப்பு உள்ளது. இதன் அருகில், திறந்த வெளிப்பகுதியில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட பழங்கால கல் சிலைகள் மற்றும் சிற்பங்களை காணலாம்.மேலும், பல்வேறு பழங்கால இயந்திரங்கள், மாட்டு வண்டி, மரத் தேர், மட்பாண்ட சாதனங்கள், கரும்புகளை அரைக்க பயன்படும் இயந்திரங்கள் போன்றவை காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.பண்டைய கர்நாடகாவில் பயன்படுத்தப்பட்ட அன்றாட பொருட்கள் உள்ளன. இந்த அருங்காட்சியகத்தில் மாநிலத்தின் நாட்டுப்புற கலைகள் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக அடிக்கடி பல திருவிழாக்கள், நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.