UPDATED : பிப் 18, 2024 12:00 AM
ADDED : பிப் 18, 2024 10:08 PM
புதுக்கோட்டை:
புதுக்கோட்டை மாவட்டம், கந்தர்வக்கோட்டை அருகே அக்கச்சிப்பட்டி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள கிணற்றில், 100க்கும் மேற்பட்ட பண்டல்களாக, 5,000க்கும் மேற்பட்ட அரசு பள்ளி மாணவர்களுக்கான சீருடைகள் இருந்தன. இதைப்பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.கந்தர்வக்கோட்டை போலீசார், கல்வித்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு சென்ற அதிகாரிகள், சீருடைகளை மீட்டனர். அவற்றை கிணற்றில் வீசியது யார் என, தெரியவில்லை. விசாரணை நடக்கிறது.கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது:
கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட சீருடைகள், கடந்த, 2018 - 2019 கல்வியாண்டில் மாணவர்களுக்கு வழங்கி இருக்க வேண்டியவை. பின், 2020ம் ஆண்டு பள்ளி சீருடை வண்ணம் மாற்றப்பட்டது.தொடக்கக் கல்வி படிக்கும் மாணவ - மாணவியரின் சீருடைகள் தான் கிணற்றில் வீசப்பட்டுள்ளது. இதை யார் வீசியது என, விசாரணை நடத்தப்படும். அரசு விதிப்படி சீருடைகளை மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்திற்கு திருப்பி அனுப்ப வேண்டும். அவ்வாறு செய்யாமல் நான்கு ஆண்டுகளாக தங்கள் வசம் வைத்திருந்து, தற்போது அனுப்பினால் பிரச்னையாகும் எனக்கருதி, கிணற்றில் வீசி இருக்கலாம்.சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர்கள் கூறினர்.