சந்திரயான் - 4ல் நிலவின் கனிமம் பூமிக்கு எடுத்து வரப்படும்: சோம்நாத்
சந்திரயான் - 4ல் நிலவின் கனிமம் பூமிக்கு எடுத்து வரப்படும்: சோம்நாத்
UPDATED : பிப் 18, 2024 12:00 AM
ADDED : பிப் 18, 2024 10:15 PM
ஸ்ரீஹரிகோட்டா, சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் நேற்று அவர் அளித்த பேட்டி:
ஜி.எஸ்.எல்.வி., எப் 14 ராக்கெட் மற்றும் இன்சாட் 3டிஎஸ் செயற்கைக்கோள் மிகவும் துல்லியமான திட்டம். இந்த செயற்கைக்கோள், இன்சாட் வரிசையில் மூன்றாவதாகும். இந்த ராக்கெட்டும், மற்ற ராக்கெட்டுகளை விட அதிக எடையை சுமந்து செல்லும் திறன் உடையது.இன்சாட் 3டிஎஸ் செயற்கைக்கோள், காலநிலை மாற்றங்கள், இயற்கை பேரிடரை துல்லியமாக கண்காணித்து, முன்கூட்டியே தகவல்களை அனுப்பும். இது, ஒவ்வொரு, 25 நிமிடங்களுக்கும் தகவல்கள் மற்றும் புகைப்படங்களை எடுத்து அனுப்பும்.ஜி.எஸ்.எல்.வி., வகையில் தொடர்ந்து இரு ராக்கெட்டுகளும் வெற்றிகரமாக செயல்பட்டன. இந்த திட்டத்திற்கு, நிதி உதவி அளித்த மத்திய அரசுக்கு நன்றி. அடுத்த செயற்கைக்கோள் திட்டத்தை, அமெரிக்காவின், நாசா உடன் இணைந்து, ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட் உதவியுடன் செயல்படுத்த உள்ளோம். இனி, இன்சாட் 3டிஎஸ் செயற்கைக்கோள் பணிகளை, இந்திய வானிலை ஆய்வு மையம் கண்காணிக்கும்.விண்வெளி திட்டங்களில், ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு, பல்வேறு உதவிகள் செய்யப்பட்டு வருகின்றன. அந்நிறுவனங்களுக்கு மத்திய அரசும் நிதி உதவி வழங்குகிறது. மனிதனை விண்வெளிக்கு அனுப்பும், ககன்யான் திட்டத்திற்கு பலகட்ட சோதனைகள் செய்ய வேண்டியுள்ளது.இந்தாண்டில் மனிதன் இல்லாமல் அத்திட்டம் செயல்படுத்தப்படும். அடுத்தாண்டில் ககன்யான் திட்டம் முழுதுமாக செயல்படுத்தப்படும். சூரியனை ஆய்வு செய்ய அனுப்பப்பட்ட, ஆதித்யா எல்1 விண்கலம் சிறப்பாக செயல்பட்டு, பல்வேறு தகவல்களை அனுப்பி வருகிறது.மத்திய அரசின் அனுமதியுடன் நிலவுக்கு செல்லும், சந்திரயான் - 4 திட்டம் செயல்படுத்தப்படும். இது, மற்ற சந்திரயான் திட்டங்களை போல இருக்காது. சந்திரயான் - 4 திட்டத்தில், ரோபோவை பயன்படுத்தி நிலவில் தரையிறங்க வைத்து, அங்குள்ள கனிமங்களை பூமிக்கு எடுத்து வந்து, ஆய்வு செய்வோம். அதிக தொழில்நுட்பம் உடைய அத்திட்டம் மிகவும் சவாலானது. இவ்வாறு அவர் கூறினார்.