UPDATED : பிப் 19, 2024 12:00 AM
ADDED : பிப் 19, 2024 07:05 AM
திருப்பூர்:
மதுரையை சேர்ந்த அசோக் - ஆனந்த் ஆகிய இரட்டை சகோதரர்கள், 15 ஆண்டுகளாக, ஜக்லிங் வித்தையில், சக்கைப்போடு போடுகின்றனர்.சமீபத்தில், வனத்துக்குள் திருப்பூர் சார்பில், திருப்பூர் மாநகராட்சி அறிவியல் பூங்காவில் நடந்த விழாவில், இவர்களது சாகசம் பலரது பாராட்டுகளையும் பெற்றது. இருவரும் பிணைந்து நின்று, ஏழு பந்துகளை லாவகமாக துாக்கி வீசி, பிடித்து சாகசம் செய்தனர். கத்தி, தீப்பந்தம், கதம் போன்ற பொருட்களையும் வீசி பிடித்தனர்.இடையே, ஒரே தொப்பியை இருவரும் மாற்றி, மாற்றி அணிந்தனர். உச்சமாக, ஒருவர் மீது அமர்ந்து யோகாசனம் செய்தபடி, பந்துகளை வீசி பிடித்தது, பலத்த கரவொலியை பெற்றது. அவர்கள் நம்மிடம் பகிர்ந்தவை: பத்தாம் வகுப்பு படிக்கும் போது, கிரிக்கெட் பயிற்சிக்கு செல்வோம். பந்தை வீசி பிடித்து பயிற்சி செய்வோம், அதிலிருந்துதான், ஜக்லிங் ஆரம்பித்தது.மதுரை கல்லுாரியில், பி.எஸ்.சி., இயற்பியல் படித்த போது, தனித்திறமையை வெளிப்படுத்த, மூன்று நிமிடம் ஒதுக்குவது வழக்கம். அதில்தான், பந்துவீசி பிடிக்கும் விளையாட்டில், கல்லுாரி விழாவில், முதன்முதலாக பரிசு பெற்றோம்; பின், பல மடங்கு, பயிற்சியை விரிவாக்கினோம். தனி ஆளாக இருப்பதை காட்டிலும், இரட்டையர் என்பதால், பார்ப்பவர்கள் பரவசமடைந்து, ஊக்குவித்தனர்.ஜக்லிங் கற்க துவங்கியதும், பலரும் கிண்டல் செய்தனர். இரவு 11:00 மணிக்கு பிறகு, அம்மாவை அமர வைத்து, தெருவிளக்கு வெளிச்சத்தில், ரோட்டில் வித்தை கற்றோம். குருநாதர் யாருமே இல்லை. நாங்களே தெரிந்தபடி யோசித்து, ஒவ்வொரு ஸ்டெப்பையும் கற்றோம்.நடிகர் பாண்டியராஜன் மூலம், டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடிந்தது. முதல் எபிசோடிலேயே பரிசு பெற்று பாராட்டுகளை குவித்தோம். பின், சாப்ட்வேர் நிறுவன வேலையை துறந்து, முழு நேரமும் இதிலேயே மூழ்கினோம்; புல்லாங்குழல் பயிற்சியும் பெற்றுள்ளோம். புல்லாங்குழல் முனைவர் பட்டம் பயின்று வருகிறோம்.திருப்பூரை சேர்ந்த பரம்பொருள் பவுண்டேஷன் சார்பில், முனைவர் படிப்புக்கு, உதவி வழங்கி வருகின்றனர். எப்போதும் திருப்பூருக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறோம். கடகடவென பேசிய அவர்கள், சிறுவயது விருப்பப்படி, இரட்டையரைத்தான் திருமணம் செய்திருக்கிறோம் என்றனர் கலகலப்பு மாறாமல். ஜக்லிங் கற்க துவங்கியதும், பலரும் கிண்டல் செய்தனர். இரவு 11:00 மணிக்கு பிறகு, அம்மாவை அமர வைத்து,தெருவிளக்கு வெளிச்சத்தில், ரோட்டில் வித்தை கற்றோம். குருநாதர் யாருமே இல்லை. நாங்களே தெரிந்தபடி யோசித்து, ஒவ்வொரு ஸ்டெப்பையும் கற்றோம்.