UPDATED : பிப் 21, 2024 12:00 AM
ADDED : பிப் 21, 2024 06:56 AM
பல்லடம்:
திருப்பூர் மாவட்டம், பல்லடத்தை தலைமையிடமாகக் கொண்டு உலகத் தென்னை உழவர் உற்பத்தியாளர் நிறுவனம், கடந்த 2022ல் ஆரம்பிக்கப்பட்டது. இந்நிறுவனம் மூலம் உற்பத்தி செய்யப்படும் தென்னீரா, வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது.இந்நிறுவனம் சார்பில், கொச்சியில் இருந்து 60 ஆயிரம் டெட்ரா பேக்குகள் அடங்கிய தென்னீரா அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. இதன் நிர்வாக இயக்குனர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். நிர்வாக இயக்குனர் சுந்தரராஜ், தென்னை வளர்ச்சி வாரியத் துணைத்தலைவர் ஹனுமன்தே கவுடா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மத்திய தோட்டக்கலை பயிர்கள் ஆராய்ச்சி மைய(சி.பி.சி.ஐ.ஆர்.,) இயக்குனர் டாக்டர் ஹெப்பர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.நிர்வாக இயக்குனர் பாலசுப்பிரமணியம் கூறியதாவது:
பல்வேறு தனியார் நிறுவனங்கள் முயற்சித்து தோல்வி கண்ட நீரா பானத்தை, சர்வதேச தரத்துடன், எப்.எஸ்.எஸ்.சி.,- 22000 சான்றுடன் தயாரித்து விற்கிறோம். திருப்பூர், கோவை மாவட்ட தென்னை விவசாயிகள் இந்நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொண்டு உறுப்பினர்களாக உள்ளனர்.காசர்கோடில் உள்ள மத்திய பயிர் ஆராய்ச்சி நிறுவனம், தஞ்சையில் உள்ள இந்திய உணவு பதனிடும் தொழில்நுட்ப மையத்துடன்(என்.ஐ.எப்.டி.இ.எம்.,) இணைந்து நீரா பானத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச்செல்லும் ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. சென்னை, கோவை, திருச்சி, திருப்பூர், ஈரோடு, சேலம் ஆகிய மாவட்டங்களில் நேரடி விற்பனையும், ஆன்லைன் முறையிலும் விற்பனை நடந்து வருகிறது. கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 50 ஆயிரம் டெட்ரா பேக்குகள் தென்னீரா, சென்னையில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. இம்முறை, இரண்டாம் கட்டமாக, கொச்சியில் இருந்து, 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 60 ஆயிரம் டெட்ரா பேக்குகள் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. வரும் ஆண்டில் ஏற்றுமதியை மேலும் அதிகப்படுத்த திட்டமிட்டுள்ளோம்.இவ்வாறு, பாலசுப்பிரமணியம் கூறினார்.