பள்ளி நிலத்தை சர்வே செய்து கையகப்படுத்த கலெக்டரிடம் மனு
பள்ளி நிலத்தை சர்வே செய்து கையகப்படுத்த கலெக்டரிடம் மனு
UPDATED : பிப் 23, 2024 12:00 AM
ADDED : பிப் 23, 2024 07:13 AM
ஊட்டி:
பந்தலுார் அருகே ஆக்கிரமிக்கப்பட்ட பள்ளி நிலத்தை, மீண்டும் சர்வே செய்து, கையகப்படுத்த வேண்டும் என கோரிக்கை விடப்பட்டுள்ளது.பள்ளி பி.டி.ஏ., மற்றும் மேலாண்மை குழு நிர்வாகி அஸ்பினிா கலெக்டரிடம் அளித்த மனு:
பந்தலுார் அருகே எருமாடு மராடி பகுதியில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்படுகிறது. பள்ளிக்கு சொந்தமான, 3.5 ஏக்கர் நிலம் உள்ள நிலையில், பலர் கையகப்படுத்தி ஆக்கிரமித்துள்ளனர். பள்ளியை சுற்றிலும் பாதுகாப்பு சுவர் கட்டும் பணி துவங்கியுள்ள நிலையில், பள்ளிக்கு உரிய நிலத்தை சர்வே செய்யாமல், பாதுகாப்பு சுவர் கட்டக் கூடாது என, பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.கடந்த டிச., மாதம் பந்தலூர் தாசில்தார் முன்னிலையில், சர்வே செய்த போது, பள்ளி நிலம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டது.நிலத்தை கையகப்படுத்தி, பள்ளி நிர்வாகத்திடம் ஒப்படைக்காமல், வருவாய் துறை மற்றும் கூடலுார் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் அலட்சியம் காட்டி வந்துள்ளனர்.பள்ளி பி.டி.ஏ., மற்றும் மேலாண்மை குழு சார்பில், போராட்டம் நடத்த முடிவெடுத்த நிலையில், போலீசார் ஜன., 30ம் தேதிக்குள் ஆக்கிரமிப்பு நிலம் அகற்றப்படும் என தெரிவித்ததை அடுத்து, போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.இந்த நிலம், பெயரளவுக்கு சர்வே செய்யப்பட்டுள்ளது. வேறு சர்வேயர்களை நியமித்து, மீண்டும் சர்வே செய்து, பள்ளிக்கு சொந்தமான ஆக்கிரமிப்பு நிலத்தை கையகப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.