ஆபத்தான முறையில் தண்டவாளத்தை கடந்து செல்லும் பள்ளி மாணவர்கள்
ஆபத்தான முறையில் தண்டவாளத்தை கடந்து செல்லும் பள்ளி மாணவர்கள்
UPDATED : பிப் 24, 2024 12:00 AM
ADDED : பிப் 24, 2024 08:45 AM
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு - சென்னை கடற்கரை தடத்தில், மூன்று தடங்களில் தினமும் 60க்கும் மேற்பட்ட புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன.அதுமட்டுமின்றி, சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து தென் மாவட்டங்களுக்கு எக்ஸ்பிரஸ் ரயில்களும் இயக்கப்படுகின்றன. இந்த தண்டாவளங்களைச் சுற்றியுள்ள குடியிருப்புகளைச் சேர்ந்தோர், போதிய விழிப்புணர்வு இல்லாமல் தண்டவாளங்களை கடப்பது, அமர்ந்து பேசுவது, நடைபயிற்சி மேற்கொள்வது போன்ற செயல்களில் ஈடுபடுவது போன்றவை சமீபகாலமாக அதிகரித்துள்ளது.குறிப்பாக, சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து செங்கல்பட்டு ரயில் நிலையம் வந்து, இங்குள்ள பள்ளிகளுக்கு செல்லும் மாணவ - மாணவியர், தினமும் ரயில் நிலையத்தில் இருந்து குறுக்கு பாதையில் செல்ல தண்டவாளத்தை ஆபத்தான முறையில் கடந்து செல்கின்றனர்.அதேபோல மறைமலை நகர், சிங்கபெருமாள்கோவில், கூடுவாஞ்சேரி உள்ளிட்ட பகுதிகளிலும், பலர் தண்டவாளங்களில் மொபைல்போன் பேசியபடியே நடந்து செல்கின்றனர். இதைத் தொடர்ந்து, மூன்றாவது தடத்தில் ரயில்கள் இயக்கப்பட்டதில் இருந்து அடிக்கடி ரயில் மோதி பலர் உயிரிழக்கும் சம்பவம் அவ்வப்போது அரங்கேறி வருகிறது.எனவே, ஆபத்தான முறையில் தண்டவாளங்களை கடந்து செல்வோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து, ரயில்வே நிர்வாகம் பள்ளி குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.மேலும், தண்டவாளங்களை ஒட்டியுள்ள தற்காலிக பாதைகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.