பள்ளி ஆசிரியை மீது புகார் அளித்த மாணவியின் தாய்க்கு கொலை மிரட்டல்
பள்ளி ஆசிரியை மீது புகார் அளித்த மாணவியின் தாய்க்கு கொலை மிரட்டல்
UPDATED : பிப் 24, 2024 12:00 AM
ADDED : பிப் 24, 2024 08:47 AM
மங்களூரு:
கடவுள் ராமரை பற்றி அவதுாறாக பேசிய பள்ளி ஆசிரியைக்கு எதிராக பேட்டி அளித்த மாணவியின் தாய்க்கு, வெளிநாட்டில் இருந்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது.கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையில், காங்., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள மங்களூரு ஜெரோசா பள்ளியில் பணியாற்றிய ஆசிரியை ஒருவர், சமீபத்தில் மாணவி ஒருவரிடம் கடவுள் ராமரை பற்றியும், குங்குமம் குறித்தும், அவதுாறாக சர்ச்சைக்குரிய வகையில் பேசினார்.மாணவி, தன் பெற்றோரிடம் தெரிவித்தார். இது, பெரும் சர்ச்சையை கிளப்பியது. பள்ளி நிர்வாகத்தை கண்டித்து, ஹிந்து அமைப்புகள் போராட்டம் நடத்தின. மாவட்ட கல்வி அதிகாரியிடமும் புகார் கொடுக்கப்பட்டது. இதையடுத்து, ஆசிரியை பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.ராமரை பற்றி அவதுாறாக பேசிய ஆசிரியைக்கு எதிராக, மாணவியின் தாய் கவிதா என்பவர், ஊடகங்களுக்கு பேட்டி அளித்தார்.இந்நிலையில், கவிதாவுக்கு வெளிநாட்டில் இருந்து, இ - மெயில் மூலம், சிலர் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். மேலும், சமூக வலைதளங்களில் கவிதாவை பற்றி அவதுாறான கருத்தையும் பரப்பியுள்ளனர்.இதுகுறித்து கவிதா அளித்த புகாரின்படி, கங்கனாடி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இ - மெயில் வந்த முகவரியை வைத்து, போலீசார் விசாரணை நடத்துகின்றனர். கவிதாவும் ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியை பணியில் இருந்தார். இந்த பிரச்னைக்கு பின், அவரையும், பள்ளி நிர்வாகம் பணிநீக்கம் செய்துவிட்டது.