பச்சையப்பா கல்லுாரி காலிப்பணியிடம் அறிவிப்பை எதிர்த்த மனு தள்ளுபடி
பச்சையப்பா கல்லுாரி காலிப்பணியிடம் அறிவிப்பை எதிர்த்த மனு தள்ளுபடி
UPDATED : பிப் 26, 2024 12:00 AM
ADDED : பிப் 26, 2024 06:51 AM
சென்னை:
பச்சையப்பா அறக்கட்டளையின் கீழ், சென்னை, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள ஆறு கல்லுாரிகளில், காலியாக உள்ள உதவிப் பேராசிரியர், உடற்கல்வி ஆசிரியர், நுாலகர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு, விண்ணப்பங்களை வரவேற்று அறிவிப்பு வெளியிடப்பட்டது.அறிவிப்பை வெளியிட, இடைக்கால நிர்வாகிக்கு அதிகாரம் இல்லை; கல்லுாரி கல்வித்துறையின் முன் அனுமதி பெறவில்லை என, உயர் நீதிமன்றத்தில், முன்னாள் மாணவர் ராமமூர்த்தி என்பவர் வழக்கு தொடர்ந்தார்.மனு, தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி பரத சக்ரவர்த்தி அடங்கிய முதல் பெஞ்ச் முன், விசாரணைக்கு வந்தது. பச்சையப்பா அறக்கட்டளை சார்பில், தேர்வு தொடர்பான விளம்பரத்தை, கல்லுாரி குழு செயலர் தான் வெளியிட்டார். ஆறு கல்லுாரிகளிலும், 132 பணியிடங்கள் காலியாக உள்ளன என தெரிவிக்கப்பட்டது.சட்டப்படி விளம்பரம் வெளியிட, கல்லுாரி குழு செயலருக்கு அதிகாரம் உள்ளது; நீண்ட காலத்துக்கு பணியிடங்களை காலியாக வைத்திருக்க முடியாது; வழக்கில் தகுதி இல்லை எனக்கூறி, மனுவை தள்ளுபடி செய்து, முதல் பெஞ்ச் உத்தரவிட்டது.