மருத்துவ படிப்பில் இரட்டை இருப்பிட சான்று வழக்கு பைசல்
மருத்துவ படிப்பில் இரட்டை இருப்பிட சான்று வழக்கு பைசல்
UPDATED : பிப் 28, 2024 12:00 AM
ADDED : பிப் 28, 2024 12:09 PM
மதுரை:
தமிழக மருத்துவக் கல்லுாரிகளில் சேர, இரட்டை இருப்பிடச் சான்றுடன் விண்ணப்பித்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை கோரி, அமைச்சர் தியாகராஜன் தாக்கல் செய்த வழக்கு பைசல் செய்யப்பட்டது.மதுரை மத்திய தொகுதி தி.மு.க., - எம்.எல்.ஏ.,வும், அமைச்சருமான தியாகராஜன், 2017ல் தாக்கல் செய்த பொதுநல மனு:
நீட் தேர்வு வாயிலாக மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கை நடக்கிறது. தமிழக மருத்துவக் கல்லுாரிகளில் படிப்பை முடித்தவர்கள் கிராமப்புறங்களில், 2 ஆண்டுகள் கட்டாயம் பணிபுரிய வேண்டும்.இவ்விதி வெளிமாநிலங்களிலிருந்து வந்து, தமிழக மருத்துவக் கல்லுாரிகளில் படிப்பை முடிக்கும் மாணவர்களுக்கு பொருந்தாது. தமிழக மருத்துவக் கல்லுாரிகளில், 85 சதவீத இடங்கள் தமிழக மாணவர்களுக்கும், 15 சதவீதம் இதர மாநிலங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.நீட் தேர்வில் கேரள மாணவி, அகில இந்திய தரவரிசைப் பட்டியலில், 514வது இடம் பிடித்தார்; கேரள தரவரிசைப் பட்டியலில் 3,129 இடம் பிடித்தார்; தமிழக தரவரிசைப் பட்டியலில் 160வது இடம் பெற்றார்.அவருக்கு சென்னையில் ஒரு மருத்துவக் கல்லுாரியில் இடம் கிடைத்துள்ளது. பலர் ஆந்திரா, கேரளா, கர்நாடகாவிலிருந்து இரட்டை இருப்பிடச் சான்றை சமர்ப்பித்து, தமிழக மருத்துவக் கல்லுாரிகளில் சேர்கின்றனர். இதனால் தமிழக மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.இது தொடர்பாக, 2017 ஜூன் 23ல் வெளியான தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்ய வேண்டும். இரட்டை இருப்பிடச் சான்று சமர்ப்பித்துள்ளதை சரிபார்க்க வேண்டும். இரட்டை இருப்பிடச் சான்று சமர்ப்பித்து, மருத்துவக் கல்லுாரிகளில் இடம் கோரி விண்ணப்பித்தவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டிருந்தார்.அந்த வழக்கை நேற்று விசாரித்த தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா, நீதிபதி ஜி.இளங்கோவன் அமர்வு பிறப்பித்த உத்தரவு:
இந்த வழக்கில், 2017 - 18 விதிகள் தொடர்பான அரசாணைக்கு எதிராக மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதன் பின், விதிகளில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. அதற்கு எதிராக தேவையெனில் மனு செய்து நிவாரணம் தேடலாம். இவ்வழக்கு பைசல் செய்யப்படுகிறது. இவ்வாறு உத்தரவிட்டனர்.