மருத்துவ மசோதாவால் தன்னாட்சி அதிகாரம் பறிப்பு: டாக்டர்கள் அதிருப்தி
மருத்துவ மசோதாவால் தன்னாட்சி அதிகாரம் பறிப்பு: டாக்டர்கள் அதிருப்தி
UPDATED : பிப் 28, 2024 12:00 AM
ADDED : பிப் 28, 2024 12:13 PM
சென்னை:
தமிழக அரசின் மசோதாவால், தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலின் தன்னாட்சி அதிகாரம் பறிக்கப்படுவதுடன், டாக்டர்களால் தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகள் தலைவராக முடியாத சூழல் உருவாகியுள்ளது என, முன்னாள் தலைவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களை உள்ளடக்கி, தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் செயல்படுகிறது. மருத்துவம் படித்த, 1.80 லட்சம் பேர் கவுன்சிலில் பதிவு செய்து, டாக்டர்களாக பணியாற்றி வருகின்றனர். மருத்துவ கவுன்சிலின், 10 உறுப்பினர்களில் ஏழு பேர் தேர்தல் வாயிலாகவும், மூன்று பேர் சென்னை மற்றும் ஸ்டான்லி மருத்துவமனைகளில் இருந்தும் தேர்வு செய்யப்படுவர்.மருத்துவ கவுன்சிலில், சில முறைகேடுகள் நடைபெறுவதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து, தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு, மக்கள் நல்வாழ்வு துறை செயலர் தலைமையிலான குழுவினர், மருத்துவ கவுன்சிலை தற்காலிகமாக நிர்வகித்து வருகின்றனர்.இந்நிலையில், தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலுக்கு புதிய மசோதாவை, அரசு தாக்கல் செய்து உள்ளது. அதில், 20 உறுப்பினர்களுடன், கவுன்சில் செயல்படும்; அவர்களில், 11 பேர் அரசால் நியமிக்கப்படுவர்; ஒன்பது பேர் டாக்டர்களால் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படுவர் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மசோதாவுக்கு டாக்டர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.கவர்னர் ஒப்புதல் தரக்கூடாது
மருத்துவ கவுன்சில் முன்னாள் தலைவர் பாலகிருஷ்ணன்:
ஏற்கனவே இருந்த நடைமுறையால், டாக்டர்களின் தன்னாட்சி அதிகாரம் பாதிக்கப்படாமல் இருந்தது. தவறு செய்யும் டாக்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் முடிந்தது. தற்போது அரசு சார்பில், 11 பேர் என்றால், அவர்கள் எடுக்கும் முடிவுக்கு அனைவரும் கட்டுப்படும் சூழல் உருவாகும். அரசுக்கு எதிராக போராடும் டாக்டர்கள் மீது துறை ரீதியாகவும், மருத்துவ கவுன்சில் வாயிலாகவும் நடவடிக்கை எடுக்கும் சூழல் அமையும். எனவே, மாற்றங்கள் ஏற்படாதவரை, மசோதாவிற்கு கவர்னர் ஒப்புதல் தரக்கூடாது.தலைவர் பதவி கிடைக்காது!
மருத்துவ கவுன்சிலின் முன்னாள் தலைவர் செந்தில்:
மருத்துவ கவுன்சிலின், 20 உறுப்பினர்கள் தான் நிர்வாகிகளை தேர்ந்தெடுக்க வேண்டும். அரசு சார்பில் 11 பேர் இருந்தால், அவர்கள் தேர்ந்தெடுப்பவர் தான், கவுன்சில் தலைவராக இருக்க முடியும். டாக்டர்களால் தேர்வு செய்யப்பட்ட ஒன்பது பேரும் உறுப்பினராக தான் நீடிக்க முடியும். மேலும், தவறு செய்யும் அரசு மருத்துவமனை டாக்டர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க முடியாத நிலை உருவாகும். எனவே, அரசு நியமன உறுப்பினர்களை விட, தேர்தல் வாயிலாக கூடுதல் உறுப்பினர்களை தேர்ந்தெடுக்க வேண்டும்.