அண்ணா பல்கலை வங்கி கணக்கில் ரூ.5.40 கோடி கையாடல் கண்டுபிடிப்பு
அண்ணா பல்கலை வங்கி கணக்கில் ரூ.5.40 கோடி கையாடல் கண்டுபிடிப்பு
UPDATED : பிப் 28, 2024 12:00 AM
ADDED : பிப் 28, 2024 01:26 PM
சென்னை:
அண்ணா பல்கலையில் அதிகாரிகள் அலட்சியத்தால், 5.40 கோடி ரூபாய்க்கு மேல் வங்கி கணக்கு நிதி கையாடல் செய்யப்பட்டு உள்ளது. இதுகுறித்து, சம்பந்தப்பட்ட கல்லுாரி அதிகாரிகள் மீது, குற்றவியல் விசாரணை நடத்த, மாநில தணிக்கை துறை பரிந்துரை செய்துள்ளது.தமிழக நிதித் துறையின் உள்ளாட்சி நிதி தணிக்கை தலைமை இயக்குனர் அறிக்கை:
*அண்ணா பல்கலையில், சென்னை குரோம்பேட்டை எம்.ஐ.டி., வளாகத்தில் விண்வெளி ஆராய்ச்சி மையம் அமைக்க, தளவாட கொள்முதலுக்கு, ஆராய்ச்சி மைய இயக்குனர் அனுமதித்த அளவை விட, அதிக தொகையில் கொள்முதல் செய்துள்ளார்.தனி நபருக்கு வழங்கப்பட்ட, இந்த நிதி அதிகாரம், நெறிமுறைக்கு எதிரானது. எனவே, 44.82 லட்சம் ரூபாய்க்கு கொள்முதல் செய்தது முறையற்றது*அண்ணா பல்கலையின், காஞ்சிபுரம் இன்ஜினியரிங் கல்லுாரியின் முதல்வராக, 2019 ஜன., 31 வரை கருணாகரன்; 2019 பிப்., 1 முதல் 2022 பிப்., 15 வரை பி.சக்திவேல்; அதன்பின், 2022 பிப்., 16 முதல் கவிதா ஆகியோர் பணியாற்றினர்.இவர்கள் முதல்வரின் கல்லுாரி நிர்வாகம், தங்கும் விடுதி, உணவு விடுதி, ஸ்டேஷனரி, ஆவின் பார்லர், தலைமை கண்காணிப்பாளர் என, பல தலைப்புகளிலும், முன்னுரிமை அடிப்படையிலும், கனரா வங்கி, இந்தியன் வங்கியில் கணக்கு வைத்திருந்தனர்.கடந்த 2023 ஏப்ரலில், நிதி துறை கணக்கு தணிக்கை மேற்கொண்டதில், கல்லுாரியில் பணியாற்றிய ஒப்பந்த பணியாளர் ஒருவர், உயர் அலுவலர்களின் அதிகாரம் பெற்ற காசோலை புத்தகத்தில், போலி கையெழுத்திட்டு, 5.40 கோடி ரூபாய் கல்லுாரி பணத்தை கையாடல் செய்தது தெரியவந்தது*காஞ்சிபுரம் இன்ஜினியரிங் கல்லுாரியில், சம்பந்தப்பட்ட காலகட்டத்தில் பணியாற்றிய டீன்கள் உள்ளிட்ட, உயர் அலுவலர்களின் அஜாக்கிரதை, அலட்சியம், வங்கி அறிக்கையை முறையாக கவனிக்காதது, வங்கி புத்தகங்கள் உள்ளிட்ட ஆவணங்களை பொறுப்பின்றி கையாண்டது போன்றவற்றால், இந்த கையாடல் நடந்துள்ளது*ஏற்கனவே நிதி தணிக்கை முறையாக பேணப்படாதது குறித்து எச்சரித்தும், கல்லுாரி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. எனவே, கல்லுாரியின் அனைத்து அதிகாரிகள், வங்கி அதிகாரிகள் மீது குற்றவியல் விசாரணை மேற்கொள்ள வேண்டும்*பாரதிதாசன் பல்கலையில், விதிகளை மீறி, 13.90 லட்சம் ரூபாய் மருத்துவ படி செலவிடப்பட்டுள்ளது. அழகப்பா பல்கலையில் அனுமதியின்றி, கூடுதல் ஒப்பந்த பணியாளர் நியமனத்தால், 1.31 கோடி ரூபாய் கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது.சென்னை பல்கலையில், விடுமுறை நாட்களில் தினக்கூலி பணியாளர்களை பணி அமர்த்தியதில், 28.60 லட்சம் ரூபாய் கூடுதல் செலவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.